Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உ.பி: 403 தொகுதிகளிலும் சந்திரசேகர் ஆசாத் கட்சி போட்டி- மாயாவதி அரசியலுக்கு எழுதப்படுகிறதா முடிவுரை?

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 403 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக பீம் ஆர்மியின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் ராவண் அறிவித்துள்ளார். உ.பி.யில் தலித் வாக்குகளை பெரிதும் நம்பியிருக்கும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு சந்திரசேகர ஆசாத் கடும் நெருக்கடியை தரக் கூடும்.

உ.பி. சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தலித், பிராமணர் வாக்குகளை குறிவைத்து மாயாவதி தீவிரமாக பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார். பிராமணர்கள் பிளஸ் தலித்துகள் என்ற முழக்கத்தை முன்வைத்துதான் 2007 சட்டசபை தேர்தலில் மாயாவதி வெற்றி பெற்றார். தற்போது பகுஜன் சமாஜ் கட்சி அந்த முழக்கத்தையே மீண்டும் கையில் எடுத்திருக்கிறது.

ஆனால் தலித் வாக்குகள் ஒட்டுமொத்தமாக மாயாவதி கட்சிக்கு செல்லக் கூடாது என்பது பாஜகவின் திட்டம். இதனால் பீகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள ஆவாம் மோர்ச்சா, மகாராஷ்டிராவில் உள்ள கூட்டணி கட்சியான மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசு கட்சி ஆகியவற்றை உ.பி. தேர்தலில் களமிறக்குகிறது பாஜக.

403 இடங்களிலும் போட்டி- ஆசாத்

403 இடங்களிலும் போட்டி- ஆசாத்

இந்த நிலையில் தலித் இளைஞர்களின் பெரும் ஆதரவைப் பெற்றுள்ள பீம் ஆர்மி அமைப்பின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் உ.பி.யின் 403 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். ஆசாத் சமாஜ் கட்சி என்ற பெயரில் தனிக்கட்சியை தொடங்கி இருக்கிறார் சந்திரசேகர் ஆசாத். இந்தியா டுடே குழுமமானது பஞ்சாயத்து ராஜ் ஆஜ்தக் என்ற தலைப்பில் உ.பி. சட்டசபை தேர்தல் தொடர்பான விவாத நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருக்கிறது. இதில் அனைத்து கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர்.

தலித்துகளிடம் அதிகாரம்

தலித்துகளிடம் அதிகாரம்

இந்நிகழ்ச்சியில் பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் பேசியதாவது: உ.பியில் கடந்த நான்கரை ஆண்டுகாலம் தலித்துகள் மிக மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகினர். இப்போது தலித்துகள் மீண்டும் அதிகாரத்தை பெற விரும்புகின்றனர். தலித் மக்களின் உரிமைகளுக்காக பீம் ஆர்மி தொடர்ந்து போராடும். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் மூலம் தலித்துகள், ஏழைகள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்; அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் இலக்கு. உ.பி.யில் 403 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிட உள்ளோம். சமூகத்தின் அனைத்துநிலை மக்களுடனும் நாங்கள் இணைந்து செயல்பட்டு மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டிருக்கிறோம். தலித்துகள் பலவீனமானவர்கள்; ஒருசில இடங்களை கொடுத்துவிட்டால் போதும் என சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்கும் தேர்தல் மூலமாக தக்க பதிலடியைத் தருவோம். எவருக்கும் அடிபணிந்து போகிறவர்கள் நாங்கள் இல்லை. எங்களது ஒற்றை இலக்காக இருப்பது எந்த விலை கொடுத்தேனும் பா.ஜ.க.வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதுதான். இவ்வாறு சந்திரசேகர் ஆசாத் பேசினார்.

தலித் வாக்குகள் யாருக்கு?

தலித் வாக்குகள் யாருக்கு?

உ.பி. சட்டசபை தேர்தலில் தலித்துகளின் 20% வாக்குகள் மிக முக்கியமானவை. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் என அனைத்து கட்சிகளுமே தலித் வாக்குகளை ஒட்டுமொத்தமாக அறுவடை செய்ய வியூகம் வகுத்துள்ளன. இந்த ரேஸில் சந்திரசேகர் ஆசாத்தும் இணைந்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்சிராமின் பிறந்த நாளில்தான் தமது ஆசாத் சமாஜ் கட்சியைத் தொடங்கினார் சந்திரசேகர் ஆசாத். அப்போதே பகுஜன் சமாஜ் கட்சியின் வாக்குகளை சிதறடிக்கப் போகிறார் ஆசாத் என கூறப்பட்டது. உ.பி.யில் தொடக்கத்தில் தலித்துகளின் வாக்குகள் காங்கிரஸ் வசம் இருந்தது. அதன் பின்னர் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒட்டுமொத்தமாக தலித் வாக்குகள் சென்றன. ஆனால் கடந்த சில தேர்தல்களில் தலித் வாக்குகள் பாஜகவுக்கு போய்க் கொண்டிருக்கிறது. கடந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யின் 17 ரிசர்வ் தொகுதிகளில் 14-ல் பா.ஜ.க. வென்றது. தற்போதும் அதேநிலைமைதான் நீடிப்பதாக சொல்ல முடியாது.

நம்பிக்கையை இழந்த மாயாவதி

நம்பிக்கையை இழந்த மாயாவதி

சந்திரசேகர் ஆசாத் தமது ஆசாத் சமாஜ் கட்சியின் கட்டமைப்பை வாக்குச் சாவடிகள் நிலையில் பலப்படுத்தி வைத்திருக்கிறார். மாயாவதியின் அரசியல் அலை ஓய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக ஆசாத்தை தலித்துகள் பார்க்கின்றனர். அதனால்தான் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, காங்கிரஸ், ராஷ்டிரிய லோக் தள் கட்சிகளில் இருந்து 98 தலைவர்கள் ஆசாத் சமாஜ் கட்சி தொடங்கப்பட்ட போது ஐக்கியமாகினர். இவர்களில் 28 பேர் மாஜி எம்.எல்.ஏக்கள். 6 பேர் மாஜி எம்.பி.க்கள். அத்துடன், மாயாவதியை பாஜகவின் பி டீம் ஆக பார்க்கும் போக்குதான் தலித்துகளிடத்தில் இருக்கிறது. சந்திரசேகர் ஆசாத் கட்சியை தொடங்கிய போது இதை பகிரங்கமான குற்றச்சாட்டாகவே தலித் தலைவர்கள் முன்வைத்தனர். தலித்துகளை மாயாவதி கைவிட்டுவிட்டார்; அதனால்தான் ஆசாத் கட்சி மீது நம்பிக்கை வைக்கிறோம் என்றனர் தலித் தலைவர்கள். களநிலவரங்களும் கூட இழந்துவிட்ட செல்வாக்கை மாயாவதி மீண்டும் தலித்துகளிடம் பெற முடியாது; அவரது இடத்தை சந்திரசேகர் ஆசாத் நிரப்புவார் என்றே தெளிவுபடுத்துகின்றன.

மாயாவதியின் சரிந்த வாக்கு வங்கி

மாயாவதியின் சரிந்த வாக்கு வங்கி

2007 சட்டசபை தேர்தலில் தாம் தலித்துகளுக்கான கட்சி தலைவர் அல்ல; அனைத்து ஜாதியினருக்குமான தலைவர் என மாயாவதி மடைமாற்றிக் கொண்டார். அந்த தேர்தலில் அது மாயாவதிக்கு மிகப் பெரும் வெற்றியை கொடுத்தது. அப்போது பகுஜன் சமாஜ் காட்சியில் 34 பிராமணர் எம்.எல்.ஏக்கள் இருந்தனர்; இதர பிற்படுத்தப்பட்ட ஜாதிகளில் இருந்து 51 எம்.எல்.ஏக்கள் மாயாவதியிடம் இருந்தனர். 26 முஸ்லிம்கள் எம்.எல்.ஏக்களை அப்போது மாயாவதியால் பெற முடிந்தது. ஆனால் 2012, 2017 சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி படிப்படியாக கரைந்து போனது. 2012 தேர்தலில் 29% வாக்குகளைப் பெற்ற அந்த கட்சியால் 2017 தேர்தலில் 22% வாக்குகளைத்தான் பெற முடிந்தது. ரிசர்வ் தொகுதிகளில் கூட 2012 தேர்தலில் 27% வாக்குகளைப் பெற்ற மாயாவதியால் 2017 தேர்தலில் 24% வாக்குகளைப் பெற முடிந்தது. இப்படி ஏற்கனவே தலித்துகளிடம் இருந்து விலகிவிட்ட மாயாவதியின் இடத்தை அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலில் பீம் ஆர்மியின் சந்திரசேகர ஆசாத் ராவண் நிரப்புவாரா? என்பத தலித்துகள் கைகளில்தான் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+