உ.பி.யில் சூடுபிடிக்கும் ஆட்டம் :10 கட்சிகள் கூட்டணியை உடைத்தது பாஜக- அகிலேஷுடன் கை கோர்க்கும் ஓவைசி

Subscribe to Oneindia Tamil

லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி உட்பட 10 கட்சிகள் இணைந்து உருவாக்க திட்டமிட்டிருந்த கூட்டணியை உடைத்துவிட்டது பாஜக. இந்த கூட்டணியை உருவாக்குவதில் முனைப்பாக இருந்த ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் எஸ்.பி.எஸ்.பி கட்சியை பாஜக தங்கள் பக்கம் இழுப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் ஓவைசி கட்சி கூட்டணி அமைக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் 403 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் இப்போதே அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமான பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறது.

உ.பி.யில் ஆளும் பா.ஜ.க. அரசு எப்படியாவது ஆட்சியை தக்க வைக்க முயற்சித்து வருகிறது. எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுவிடக் கூடாது, ஜாதிய வாக்குகள் ஒரே கட்சிக்கு போய்விடக் கூடாது என்பதில் மிக மிக கவனமாக காய் நகர்த்தி வருகிறது பா.ஜ.க.

அகிலேஷ், மாயாவதி நம்பிக்கை

அகிலேஷ், மாயாவதி நம்பிக்கை

பா.ஜ.க. அரசு மீதான கடும் அதிருப்தி, பிற்படுத்தப்பட்ட- சிறுபான்மை சமூக வாக்குகள் ஆகியவற்றை பலமாக நம்பி மீண்டும் ஆட்சியை கைப்பற்றிவிடலாம் என எதிர்பார்ப்புடன் இருக்கிறார் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ். பிராமணர்கள் பிளஸ் தலித் கூட்டணி என்ற 2007 சட்டசபை தேர்தலில் பெரும் வெற்றியை தந்த பார்முலாவுடன் பகுஜன் சமாஜ் கட்சியின் மாயாவதி களத்தில் நிற்கிறார். நாங்களும் ரேஸில்தான் இருக்கிறோம் என்கிற வகையில் காங்கிரஸ் கட்சியும் இருந்து வருகிறது.

ஜாதி கட்சிகள்- ஓவைசி கட்சி கூட்டணி

ஜாதி கட்சிகள்- ஓவைசி கட்சி கூட்டணி

இந்த பிரதான கட்சிகள் இல்லாமல் சுகல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி (எஸ்.பி.எஸ்.பி) கட்சியின் தலைவர் ராஜ்பார் தலைமையில் 10 சிறிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டன. இந்த அணியில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி இடம்பெறும் எனவும் 100 இடங்களில் அக்கட்சி போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டது. தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் வலிமையாக இருந்த ஓவைசியின் கட்சி மகாராஷ்டிரா, பீகார் என பல மாநில தேர்தல்களையும் எதிர்கொண்டது. அகில இந்திய அளவில் முஸ்லிம்களுக்கான ஒரு கட்சியாக உருவெடுக்க முனைகிறது ஓவைசி கட்சி. பீகாரில் ஓவைசி கட்சிக்கு 5 இடங்கள் கிடைத்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆனால் தமிழகம், மேற்கு வங்க தேர்தல்களில் அந்த கட்சியால் திருப்பங்களைத் தர முடியவில்லை. இப்போது உ.பி. தேர்தல் களத்துக்கும் வந்திருக்கிறது.

ஜாதி கட்சி கூட்டணியை உடைத்த பாஜக

ஜாதி கட்சி கூட்டணியை உடைத்த பாஜக

ராஜ்பாரின் தலைமையிலான ஓவைசி கட்சி இடம்பெறுவதால் முஸ்லிம் வாக்குகளை நம்பி இருந்த சமாஜ்வாதி கட்சிக்கு பின்னடைவாக இருக்கும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் உ.பி. தேர்தல் களத்தில் கடந்த சில நாட்களாக பரபரப்பான திருப்பங்கள் ஒவ்வொரு நாளும் அரங்கேறி வருகின்றன. லக்னோவில் பாஜகவின் மாநில தலைவர் ஸ்வந்திரதேவ் சிங், துணைத் தலைவர் தயாசங்கர் சிங் ஆகியோரை திடீரென 10 கட்சி கூடணியின் தலைவரான ஓம்பிரகாஷ் ராஜ்பார் சந்தித்தார். இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என ராஜ்பார் கூறி வருகிறார். ஓம் பிரகாஷ் ராஜ்பாரின் கூட்டணியில் பிற்படுத்தப்பட்ட ஜாதி கட்சிகள் இணைந்திருக்கின்றன. அத்துடன் ஓவைசி கட்சியும் இணைந்துள்ளது. இந்த கூட்டணியை அப்படியே தங்கள் பக்கம் இழுக்க அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி திட்டமிட்டிருந்தது. இதனை பகிரங்கமாகவே ஓவைசி கட்சி வரவேற்கவும் செய்திருந்தது. ஒட்டுமொத்த பிற்படுத்தப்பட்ட ஜாதி வாக்குகளும் முஸ்லிம் வாக்குகளும் சமாஜ்வாதி அணிக்கு போவது தங்களுக்கு நெருக்கடி என அரண்டு போனது பாஜக. இதனையடுத்தே ராஜ்பாரை தங்கள் பக்கம் இழுத்து அந்த கூட்டணிக்கே வேட்டு வைத்துவிட்டது பாஜக. ஏற்கனவே 2016-ல் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தவர் ராஜ்பார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

அகிலேஷுடன் ஓவைசி கூட்டணி

அகிலேஷுடன் ஓவைசி கூட்டணி

ராஜ்பாரின் இப்படியான அரசியலை எல்லாம் ஏற்க முடியாது என ஓவைசி கட்சியின் உ.;பி. மாநில தலைவர் செளகத் அலி திட்டவட்டமாக கூறி வருகிறார். அத்துடன் உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டுமானால் நிபந்தனையுடன் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணிக்கும் தயார் என கூறிவருகிறது ஓவைசி கட்சி. அதாவது உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியை பிடித்தால் துணை முதல்வர் பதவியை முஸ்லிம் ஒருவருக்கு தருவோம் என அக்கட்சி வாக்குறுதி தர வேண்டும் என்பதுதான் ஓவைசி கட்சியின் நிபந்தனை. சமாஜ்வாதி கட்சியைப் பொறுத்தவரையில் காங்கிரஸுடன் நல்ல புரிதல் இருந்த போதும் தொகுதி பங்கீட்டில் சிக்கல் வரும்; காங்கிரஸ் கூடுதல் இடங்களைக் கேட்கும்- அதனை ஏற்க முடியாத நிலை உருவாகலாம். அதனால் காங்கிரஸ் உள்ளிட்ட பெரிய கட்சிகளுடன் கூட்டணியே கிடையாது; சிறிய கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்பதை நிலைப்பாடாக கூறியுள்ளது. இதனால் ஓவைசி கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி உருவாக இயல்பாகவே வாய்ப்புகள் உள்ளன. இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஓவைசி கட்சியின் உ.பி. மாநிலத் தலைவர் செளகத் அலி, எங்கள் கொள்கையில் நாங்கள் தெளிவாகவே இருக்கிறோம். பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. சமாஜ்வாதி போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்தால் முஸ்லிம் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும் என்கிறார். இந்த நிபந்தனைகளை எல்லாம் ஏற்பது என்பது சமாஜ்வாதிக்கு பெரிய கடினம் அல்ல. அதனால் அனேகமாக வரும் நாட்களில் சமாஜ்வாதி கட்சியுடன் ஓவைசி கட்சி கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வாய்ப்புள்ளது. அதேநேரத்தில் 100 தொகுதிகளை சமாஜ்வாதி கட்சி, ஓவைசி கட்சிக்கு கொடுக்குமா? என்கிற கேள்வியும் எழுந்து நிற்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+