உ.பி. தேர்தல்: ஓவைசி கட்சியுடன் கூட்டணி கிடையாது- அகிலேஷ் யாதவ் திட்டவட்டம்
லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் ஓவைசி கட்சியுடன் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைக்காது என்று அக்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இத்தேர்தலில் மாநில கட்சிகளுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

100 தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டி
மேலும் இந்த கூட்டணியில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி இணையலாம் எனவும் கூறப்பட்டு வந்தது. ஓவைசி கட்சி, உ.பி. தேர்தலில் 100 இடங்களில் போட்டியிடுவோம் என அறிவித்திருந்தது.

ஓவைசியுடன் கூட்டணி இல்லை
இது தொடர்பாக டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அகிலேஷ் யாதவ் கூறுகையில், சிறிய கட்சிகளுடன்தான் நாங்கள் கூட்டணி அமைத்து வருகிறோம். இன்னும் சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதேநேரத்தில் ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை என்றார்.

யோகிக்கு குடும்பமே இல்லை
மேலும் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு குடும்பம் என்பது இல்லை. ஆகையால் இறப்பின் வலி என்பது அவருக்கு தெரியாது. கொரோனா காலத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு ரூ1 லட்சம் நிதி உதவி வழங்கி இருக்கிறோம். கடந்த தேர்தலின் போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு நிறைவேற்றவில்லை என்றும் அகிலேஷ் யாதவ் சாடினார்.

கூட்டணி நிலவரம்
உத்தரப்பிரதேச தேர்தலில் ஜெயந்த் சவுத்ரி தலைமையிலான ஆர்.எல்.டி, கட்சியுடன் கூட்டணியை உறுதி செய்திருக்கிறது சமாஜ்வாதி கட்சி. அதேபோல் ஆம் ஆத்மி கட்சி, பிரகாஷ் ராஜ்பாரின் சுகெல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகியவையுடனும் அகிலேஷ் யாதவ் கூட்டணி அமைக்க உள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவை தனித்தே போட்டியிடுகின்றன. பாஜக ஏற்கனவே 7 ஜாதிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்திருக்கிறது.

காங்கிரஸ் நிலைப்பாடு
கடந்த உ.பி. சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி கூட்டணி அமைத்தது. ஆனால் காங்கிரஸ் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது. அதனால் இம்முறை அகிலேஷ் யாதவ் உஷாராக காங்கிரஸுடன் கூட்டணி கிடையாது என்பதில் உறுதியாகவே இருந்து வருகிறார். உ.பி.யில் கவுரவமான இடங்களைப் பெற வேண்டும் என்பதற்காக பொதுச்செயலாளர் பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் வாழ்வா? சாவா? போராட்டத்தை நடத்துகிறது. இதனால் 403 தொகுதிகளிலுமே காங்கிரஸ் தனித்தே போட்டியிடுவது என முடிவு செய்து அறிவிப்பையும் வெளியிட்டிருக்கிறது. இதுவரையிலான கருத்து கணிப்புகள் அனைத்தும் காங்கிரசுக்கு 4-வது இடம்தான் என கூறியுள்ளன.












Click it and Unblock the Notifications