'ஒன்லி பாகுபலி.. நோ பஜ்ரங்பலி..' - உத்தரப்பிரதேச பிரசாரத்தில் "பஞ்ச் அடித்த" அமித்ஷா
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் எங்கும் பாகுபலி கிடையாது, பஜ்ரங்பலி தான் உள்ளார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தற்போதுவரை மூன்று கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளது.
மீதமுள்ள தேர்தலுக்காக பிரசாரங்கள் தீவிரமாக நடந்து வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் என பாஜக தீவிர பிரசாரம் செய்து வருகிறது.

உத்தரப்பிரதேசம்
இந்தியாவே உற்று நோக்கும் தேர்தலாக உத்தரப்பிரதேச தேர்தல் உள்ளது. தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. மீண்டும் ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சித்து வருகிறது. இதற்காக பிரத்யேக பிரசார யுத்திகளை மேற்கொண்டு வருகிறது. பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் களத்தில் உள்ளன. பாஜக மற்றும் சமாஜ்வாதி கட்சிக்கு நேரடி போட்டி நிலவுகிறது.

பாஜக
உத்தரப்பிரதேசத்தில் இரண்டாவது முறையாக ஆட்சியைப் பிடித்து வரலாற்று சாதனை படைக்க ஆசைப்படுகிறது. இந்நிலையில் பாஜகவை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரம் செய்தார். அப்போது, உத்தரப்பிரதேசத்தில் பாகுபலி எல்லாம் கிடையாது, பஜ்ரங்பலிதான் உள்ளார் என்று தெரிவித்தார். பஜ்ரங்பலி என்று உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கூறினார்.

அமித்ஷா
உத்தரப்பிரதேசத்தில் பாஜக அலை அடிக்கிறது. இந்த மாநிலத்துக்காக பாஜக நிறைய செய்துள்ளது. ஏழைகளுக்காக நிறைய திட்டங்களைக் கொண்டு வந்தது. சட்டம் ஒழுங்கை பாதுகாத்துள்ளது. வாக்காளர்களிடையே பெரிய சுனாமி அலை ஏற்பட்டு பாஜகவுக்கு சாதகமாக இந்த தேர்தல் முடியும் என்று பிலிபிட்டில் நடந்த பிரசாரத்தில் அமித்ஷா தெரிவித்தார்.

ஜாதி
நான் கண்ணாடி அணிந்துள்ளேன். அதனால் என்னால் சரியாக பார்க்க முடிகிறது. அகிலேஷ் யாதவும் கண்ணாடி அணிய வேண்டும். அப்போது தான் மதம் ஜாதி கடந்து பார்க்க முடியும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவை சாடியுள்ளார் மத்திய அமைச்சர் அமித்ஷா. இந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications