கோவிலில் நாக்கை அறுத்து காணிக்கை! உபி இளைஞரின் விசித்திர வேண்டுதல்.. கடைசியில் பாருங்க என்னாச்சுன்னு
லக்னோ: உத்தரபிரதேசத்தில் தனது நாக்கை அறுத்து தெய்வத்துக்கு காணிக்கை செலுத்திய இளைஞர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டப்பகலில் கோயிலில் நாக்கை அறுத்துக் கொண்ட இளைஞரை பார்த்து அங்கிருந்த மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
பின்னர் வலியால் துடித்த அவரை மீட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எந்த மதமாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை ஒரு அளவுடன் நின்று கொண்டால் நல்லது. அதை மீறிச் செல்லும் கடவுள் நம்பிக்கை, மூட நம்பிக்கைக்கே நம்மை இட்டுச் செல்லும். அப்படி உருவாகும் மூட நம்பிக்கையானது நம் வாழ்க்கையை மட்டுமல்லாமல் பிறர் வாழ்க்கையையும் ஆபத்தில் மூழ்கடித்துவிடும்.
பில்லி சூனியம், நரபலி, ஆபத்தான நேர்த்திக் கடன்கள் போன்றவை இந்த மூட நம்பிக்கையின் நீட்சியே ஆகும்.
இதுபோன்ற ஒரு பரிதாப சம்பவம் தான் உத்தரபிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டம் பூரவ்சரிரா கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத் சரோஜ் (38). இவருக்கும், இவரது மனைவிக்கும் திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை எனக் கூறப்படுகிறது.
கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவரான சம்பத் சரோத், தனக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக உத்தரபிரதேசம் மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டு வந்தார். ஆனால், அவருக்கு குழந்தை பிறக்கவில்லை.
இதனால் விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர், கடைசியாக தனது கிராமத்தில் உள்ள கடா தம் என்ற அம்மன் கோயிலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சென்றிருக்கிறார். அப்போது தனக்கு குழந்தை பாக்கியம் வந்தால் எனது நாக்கை அறுத்து காணிக்கை செலுத்துகிறேன் என அவர் வேண்டிக் கொண்டார்.
இதனிடையே, அவரது மனைவி கர்ப்பமானது சில நாட்களுக்கு முன்பு தெரியவந்தது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சம்பத் சரோத், அம்மனின் அருளால்தான் தனக்கு குழந்தை பாக்கியம் கிடைத்தது என தீர்க்கமாக நம்பினார்.
இதையடுத்து அந்த அம்மன் கோயிலுக்கு நேற்று சென்ற சம்பத் சரோஜ், அங்கு பல பூஜை புனஸ்காரங்களை செய்தார். பின்னர் யாரிடமும் எதுவும் தெரிவிக்காமல், திடீரென தன்னிடம் இருந்த பிளேடை எடுத்து தனது நாக்கை அப்படியே அறுத்து வீசினார். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் பீய்ச்சி அடித்தது.
இதனை பார்த்த அங்கிருந்த மக்கள், என்ன நடக்கிறது என தெரியாமல் அங்கிருந்து அலறியடித்துக் கொண்டு ஓடினர்.
இந்நிலையில், நாக்கை அறுத்துக் கொண்ட சம்பத் சரோஜ், வலி தாங்க முடியாமல் கீழே விழுந்து துடித்தார். இதையடுத்து, அங்கிருந்தவர்கள் நிலைமையை சுதாரித்துக் கொண்டு அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ரத்தப் போக்கு அதிகமானதால் முதலில் ஆபத்தான கட்டத்தில் அவர் இருந்திருக்கிறார். அதன் பிறகு தொடர் சிகிச்சையால் தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர். ஆனால் நாக்கை அறுத்துக் கொண்டதால் அவரால் வாழ்நாள் முழுவதும் பேச முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications