ராஜ்யசபா தேர்தல்: உ.பி. யில் 10 இடங்களுக்கு 11 பேர் போட்டி- அகிலேஷ் கட்சி எம்எல்ஏக்கள் கட்சி தாவல்?
லக்னோ: ராஜ்யசபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 10 காலி இடங்களுக்கு 11 பேர் போட்டியிடுகின்றனர். அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களிக்கக் கூடும் என்பதால் பரபரப்பு நிலவுகிறது.
நாட்டின் 15 மாநிலங்களில் 56 ராஜ்யசபா இடங்களுக்கு பிப்ரவரி 27 தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. பல மாநிலங்களி 40க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கர்நாடகா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் போட்டி ஏற்பட்டுள்ளதால் இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

கர்நாடகா ராஜ்யசபா தேர்தல்: கர்நாடகாவில் 4 இடங்களுக்கு 5 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 10 காலி இடங்களுக்கு 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் எம்.எல்.ஏக்கள் கட்சி மாறி வாக்களிப்பதைத் தடுக்க ஆளும் காங்கிரஸ், பாஜக மற்றும் ஜேடிஎஸ் கட்சியினர் எம்.எல்.ஏக்களை ரிசார்ட்டுகளில் தங்க வைத்துள்ளனர். ரிசார்ட்டுகளில் இருந்து நேரடியாக சட்டசபைக்கு சென்று வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
உ.பி. ராஜ்யசபா தேர்தல்: பாஜகவின் வேட்பாளர்களாக ஆர்பிஎன் சிங், சவுத்ரி தேஜ்வீர் சிங், அமர்பால் மவுரியா உள்ளிட்டோரும் சமாஜ்வாதி கட்சியின் ராஜ்யசபா வேட்பாளர்களாக ஜெயாபச்சன், அலோக் ரஞ்சன் உள்ளிட்ட 5 பேரும் நிறுத்தப்பட்டுள்ளனர். சட்டசபை எம்.எல்.ஏக்கள் பலம் அடிப்படையில் பாஜக 7 ராஜ்யசபா எம்பிக்களையும் சமாஜ்வாதி கட்சி 3 எம்.பிக்களையும் தேர்ந்தெடுக்க முடியும். ஆனால் பாஜக 8-வதாக தொழிலதிபர் சஞ்சய் தேத்தை களமிறக்கியதால் போட்டி உருவாகிவிட்டது. இதனையடுத்து உ.பி. சட்டசபை வளாகத்தில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ராஜ்யசபா தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறும். பின்னர் மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
உ.பி. சட்டசபை பலம்: 403 இடங்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபையில் ஆளும் பாஜகவுக்கு 252 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். சமாஜ்வாதி கட்சிக்கு 108, காங்கிரஸ் 2, அப்னா தளம் 13, நிஷாத் கட்சி 6, ஆர்ஜேடி 9, பகுஜன் சமாஜ் கட்சி 1 எம்.எல்.ஏக்கள் இருந்தனர். தற்போதைய நிலையில் உத்தரப்பிரதேச மாநில சட்டசபையின் மொத்த எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 399. ஒரு ராஜ்யசபா எம்.பி.க்கு 37 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.
சமாஜ்வாதி கட்சி ஜெயிக்குமா?: சமாஜ்வாதி கட்சியின் 3 ராஜ்யசபா வேட்பாளர்கள் வெற்றி பெற மொத்தம் 111 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. அக்கட்சியின் 2 எம்.எல்.ஏக்கள் சிறையில் இருக்கின்றனர். எஸ்பிஎஸ்பி, ஆர்எல்டி ஆகிய கட்சி எம்.எல்.ஏக்கள் 2022 தேர்தலில் சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிட்டவர்கள். ஆகையால் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்ற கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாஜக வேட்பாளரையே ஆதரிப்போம் என்கின்றன அக்கட்சிகள்.
அகிலேஷ் கட்சியின் 8 எம்.எல்.ஏக்கள் எங்கே?: மேலும் உ.பி.யில் ராஜ்யசபா தேர்தலில் போட்டி நிலவும் நிலையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று இரவு எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏக்கள் 8 பேர் பங்கேற்கவில்லை. இவர்கள் அனைவரும் ராஜ்யசபா தேர்தலில் கட்சி மாறி பாஜக வேட்பாளருக்கு வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் உத்தரப்பிரதேச ராஜ்யசபா தேர்தலிலும் பெரும் பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications