ஏழைகளின் மருத்துவ சிகிச்சை செலவை அரசே ஏற்கும்.. உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் 'வாவ்' அறிவிப்பு!
"மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் நோயுடன் வாழ்ந்து கஷ்டப்படுவது கொடுமையிலும் கொடுமையானது. உத்தரபிரதேச மக்கள் அவ்வாறு துன்பப்படக் கூடாது"
லக்னோ: உத்தர பிரதேசத்தில் உள்ள ஏழை மக்களின் மருத்துவ செலவுகளை அரசே ஏற்கும் என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும், பணம் இல்லாமல் மருத்துவ சிகிச்சை பெற முடியாத நிலையில் உத்தரபிரதேசத்தில் ஒருவர் கூட இருக்கக் கூடாது எனவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
உத்தரபிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, அண்மைக்காலமாக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும், வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. மேலும், மாணவர்களின் கல்விக்கும், இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும் அதிக முக்கியத்துவம் தரும் திட்டங்களை உபி அரசு செயல்படுத்தி வருகிறது. உத்தரபிரதேசத்தை அனைத்து நிலைகளிலும் முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என முதல்வர் யோகி அறிவித்ததை செயல்படுத்தும் விதமாக பல திட்டங்கள் முழுவீச்சில் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், கோரக்நாத் கோயிலுக்கு நேற்று சென்ற முதல்வர் யோகி ஆதித்யநாத் அங்கு வழிபாடு செய்தார். பின்னர், அங்கு மக்கள் குறைதீர்ப்பு முகாமை அவர் நடத்தினார். அப்போது நூற்றுக்கணக்கான மக்கள் முதல்வர் யோகியிடம் மனு அளித்தனர். அந்த மனுக்களை பெற்று அதிகாரிகளிடம் வழங்கிய அவர், இந்த மனுக்கள் அனைத்தையும் முறையாக ஆய்வு செய்து, அந்தந்த துறைக்கு அனுப்பி உடனடியாக தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் பேசுகையில், உத்தரபிரதேச அரசு முன்னெடுக்கும் நலத்திட்டங்கள் யாவும் மாநிலத்தில் உள்ள கடைக்கோடி குடிமகனையும் சென்றடைய வேண்டும் என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அரசுத்துறை அதிகாரிகள்தான் இதை அடிக்கடி உறுதி செய்ய வேண்டும். குறிப்பாக, ஏழைகளுக்கும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அரசின் நலத்திட்ட உதவிகள் கட்டாயம் சென்று சேர வேண்டும். இதில் ஏதேனும் குளறுபடி நடந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது மிக மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கிறேன் என்றார்.

அதேபோல, அரசுக்கு கிடைக்கப்பெறும் மனுக்களில் பெரும்பாலும் மருத்துவ சிசிச்சை செலவு தொடர்பானதாக உள்ளது. இதை பார்க்கும் போது மனம் மிகவும் வேதனை அடைகிறது. மருத்துவ சிகிச்சைக்கு பணம் இல்லாமல் நோயுடன் வாழ்ந்து கஷ்டப்படுவது கொடுமையிலும் கொடுமையானது. உத்தரபிரதேச மக்கள் அவ்வாறு துன்பப்படக் கூடாது. எனவே, ஏழை மக்களின் மருத்துவ சிகிச்சை செலவுகளை அரசே ஏற்றுக்கொள்வது என முடிவு செய்துள்ளேன். எனவே, உங்களின் மருத்துவ சிகிச்சைக்கு ஆகும் செலவுகளை அரசுக்கு அனுப்புங்கள். அந்த மனுக்கள் மீது சுகாதாரத் துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். யார் யாருக்கு எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது குறித்த விவரம் எனக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications