பெண்ணை ஏமாற்றி உல்லாசம்.. திருமணத்துக்கு மறுத்த ஆர்சிபி வீரர் யாஷ் தயாள் மீது வழக்கு.. என்ன நடந்தது?
லக்னோ: ஐபிஎல்லில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது உத்தர பிரதேச போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண் ஒருவரை காதலித்து அவரை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி உல்லாசம் அனுபவித்து ஏமாற்றிய புகாரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணிக்காக விளையாடிவர் யாஷ் தயாள். வேகப்பந்து வீச்சாளரான இவர் உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு இப்போது 27 வயது ஆகிறது.

கடந்த மாதம் 21ம் தேதி யாஷ் தயாள் மீது காசியாபாத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பரபரப்பான புகாரை அளித்தார். உத்தர பிரதேச முதல்வரின் குறைதீர் இணையதளத்தில் அந்த இளம்பெண் புகார் பதிவு செய்தார்.
அந்த புகாரில் யாஷ் தயாள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இருந்தார். அதில், ‛‛யாஷ் தயாளும், நானும் காதலித்தோம். திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி என்னுடன் உடலுறவு வைத்தார். மேலும் என்னை அவரது குடும்பத்துக்கு அறிமுகம் செய்தார்.
யாஷ் தயாளின் குடும்பத்தினர் என்னை மருமகளாக ஏற்றுக்கொள்வதாக கூறினர். இதனால் நம்பிக்கையின் அடிப்படையில் யாஷ் தயாள் உடன் உறவு வைத்தேன். ஆனால் அவர் என்னை ஏமாற்றிவிட்டார். இதனால் வாழ பிடிக்கவில்லை. மனஅழுத்தம் காரணமாக தற்கொலைக்கு முயன்றேன்.
அதுமட்டுமின்றி பிற பெண்களுடன் அவருக்கு இருக்கும் தொடர்பு பற்றி அறிந்து மனஉளைச்சலுக்கு ஆளானேன்'' என்று கூறியிருந்தார். இந்த புகார் இந்திராபுரம் போலீசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
புகார் தொடர்பாக வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாளிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து பிஎன்எஸ் சட்டப்பிரிவு 69 ன் (திருமணம் செய்வதாக தவறான வாக்குறுதி அளித்து உடலுறவு வைத்து கொள்வது) கீழ் அவர் மீது இந்திராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதுதொடர்பாக காசியாபாத் (டிரான்ஸ் - ஹிண்டன்) போலீஸ் துணை கமிஷனர் பட்டீல் நிமிஸ் தஷரத் கூறுகையில், ‛‛யாஷ் தயாளிடம் விசாரணை நடத்தி உள்ளோம். அவர் கூறிய விஷயத்தை பதிவு செய்துள்ளோம். தற்போது அவர் மீது பிஎன்எஸ் பிரிவு 69 ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது'' என்றார்.












Click it and Unblock the Notifications