ஒவ்வொரு இந்துக்களும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும்! விஎச்பி வலியுறுத்தல்
லக்னோ: இந்துக்களிடையே பிறப்பு விகிதம் குறைந்து வருவதாகவும், இதனை சமாளிக்க ஒவ்வொரு இந்துவும் குறைந்தது 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் விஷ்வ இந்து பர்ஷித் (விஎச்பி) வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், மகாகும்பமேளா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த விஎச்பி பொதுச்செயலாளர் பஜ்ரங் லால் பங்ரா இவ்வாறு கூறியுள்ளார். உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றிருந்த இந்த நிகழ்ச்சியில் பஜ்ரங் லால் பங்ரா பேசியதாவது, "இந்துக்களுக்கு இடையே பிறப்பு விகிதம் குறைந்து வருவது கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்து மக்கள் தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டிருக்கிறது.

வங்கதேசத்தை பாருங்கள். அங்கு இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள். அதுபோன்ற ஒரு சூழல் இங்கும் உருவாக வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த பிரச்சனையை சமாளிக்க ஒவ்வொரு இந்துவுக்கும் குறைந்தது 3 குழந்தைகளாவது வேண்டும். நமது நாட்டிலும் வங்கதேசம் போன்ற சூழலை உருவாக்க சில அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கின்றன. இந்துக்கள் அனைவரும் இந்த விஷயத்தில் கொஞ்சம் ஆழமாக சிந்திக்க வேண்டும்.
வக்பு வாரியத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்த மத்திய அரசு சீர்திருத்த சட்டங்களை கொண்டு வருகிறது" என்று கூறியுள்ளார். இவரை தொடர்ந்து யோகி ஆதித்யநாத் உரையாற்றியுள்ளார். அதில், உலகம் முழுவதும் பார்த்து வரும் இந்த மகா கும்பமேளாவில் இந்தியாவின் சனாதனம் தெரிகிறது எனறு கூறியுள்ளார்.
இதற்கு முன்னர் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூட, இந்துக்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். இந்த பேச்சுகளுக்கு அடிப்படையாக, இந்துக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது என்பதாக இருந்தாலும், அரசியல் தலைவர்கள் இந்த பேச்சை கடுமையாக விமர்சிக்கின்றனர்.
மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்று அரசு பல்வேறு திட்டங்களை கடந்த காலங்களில் கொண்டு வந்தது. இது எதிர்பார்த்த அளவுக்கு பலனும் கொடுத்தது. எல்லோருக்கும் கல்வி, எல்லோருக்கும் வேலை, எல்லோருக்கும் மருத்துவத்தை கொண்டு சேர்க்க அளவான மக்கள் தொகை இருந்தால் மட்டுமே சாத்தியம் என்று பேசப்பட்டது.
இருப்பினும், உலக மக்கள் தொகையில் சீனாவை விட இந்தியா அதிகம் முன்னேறி இருக்கிறது. இந்தியாவின் மக்கள் தொகை 140 கோடியை தாண்டி சென்றுக்கொண்டிருக்கிறது. இன்னும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ளுங்கள் என்று ஆர்எஸ்எஸ், விஎச்பி கூறுவதன் மூலம், வறுமையைதான் அதிகரிக்க முடியும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இப்போது இருக்கும் சூழலில் கூட எல்லோருக்கும் கல்வி, வேலை என்பது சாத்தியமில்லாமல்தான் இருக்கிறது. அப்படியெனில் மேலும் அதிக மக்கள் தொகை என்பது பொருளாதாரத்தை பின்னோக்கியே இழுக்கும் என்றும் கூறுகின்றனர்.
மட்டுமல்லாது, தற்போது இருக்கும் அத்தனை இளைஞர்களுக்கும் வேலை கிடைக்கட்டும், பின்னர் மக்கள் தொகை உயர்வு குறித்து பேசலாம் என்றும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications