குஷியான 'குஷி நகர்' மக்கள்! யோகி ஆதித்யநாத் வெளியிட்ட 'சூப்பர்' அறிவிப்பு.. வேற லெவலில் மாறும் உ.பி
லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் குஷிநகரில் வேளாண்மை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருக்கிறார்.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அனைத்து எம்பி தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என பாஜக திட்டமிட்டுள்ளது. எனவே மாநிலத்திற்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது. மறுபுறம் முடிவுற்ற திட்டங்களை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்த வைத்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாடு, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட கூடுதல் தொகை, என பாஜக பரபரப்பாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் குஷிநகரில் உள்ள காந்தி கிசான் கல்லூரியில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று பேசிய யோகி ஆதித்யநாத் ரூ.451 கோடி மதிப்பிலான 106 வளர்ச்சி திட்டங்களை தொடக்கி வைத்தார். பின்னர் பேசிய அவர், "இந்தியா தற்போது வரை எரிபொருளுக்கு வெளிநாடுகளைதான் நம்பி இருக்கிறது. தற்போது வரை ரூ.16 லட்சம் கோடி மதிப்பில் எண்ணெய் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்தியாவில் எத்தனால் உற்பத்தியை அதிகரித்தால் இதுபோன்று நாம் வெளிநாடுகளில் கை ஏந்த வேண்டிய அவசியம் இருக்காது. எரிபொருள் உற்பத்தியில் நாடு தன்னிறைவு அடைய வேண்டும்.
இதற்கு நாம் நம்முடைய கரும்பு ஆலைகளை சீராக இயக்க வேண்டும். கரும்பு உற்பத்தியை ஊக்குவிக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் எத்தனால் உற்பத்தியை அதிகரித்து அதை வாகனங்களுக்கான எரிபொருளாக பயன்படுத்தலாம். குஷிநகர் என்பது வேளாண் பூமி. உத்தரப் பிரதேசத்தின் வேளாண் பூமியை ஊக்குவிப்பது எங்களுடைய கடமை. எனவே, குஷிநகரில் வேளாண்மை மற்றும் மருத்துவ கல்லூரி அமைக்கப்படும் என நாங்கள் வாக்குறுதி அளிக்கிறோம். இந்த இடம், பகவான் ராமர், புத்தர் மற்றும மகாவீர் ஆகியோர் தங்கள் இனிமையான காலங்களை இங்கு கழித்துள்ளனர். இப்பகுதியில் விமான நிலையம் வரும் என்று யாரும் கற்பனை கூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று கல்லூரிகளும், விமான நிலையமும் இந்த மாவட்டத்தின் கட்டமைப்பையே தலைகீழாக மாற்றிவிட்டது. இதே மாவட்டம் ஒரு காலத்தில் அச்சம் மிகுந்த மாவட்டங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தது. இந்த மாவட்டத்தின் வருவாய் அக்காலகட்டத்தில் ஒரு சிலரின் பாட்கெட்டுகளுக்கு மட்டும் சென்றுக்கொண்டிருந்தது. இப்போது இது அரசின் பாக்கெட்டுகளுக்கு வருகிறது. எனவேதான் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. கடந்த ஆட்சி காலத்தில் பண்டிகை கொண்டாட்டங்களின் போது எங்கே எப்போது கவலரம் வெடிக்கும் என்று பயந்து மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். ஆனால் பாஜக ஆட்சியில் வீடுகளில் கொண்டாட்டங்களின் மகிழ்ச்சி வெளிப்படையாக தெரிகிறது" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications