தலைகீழ் மாற்றம்.. காரணமே இந்த திட்டங்கள்தான்.. அசத்தும் கோரக்பூர்.. உ.பி முதல்வர் யோகி பூரிப்பு
லக்னோ: புதிய திட்டங்கள் உத்தரப் பிரதேச மக்களுக்கு நம்பிக்கை அளிப்பதாகவும், வாழ்க்கையின் மீதான பற்றை அதிகரிப்பதாகவும் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கிறார்.
உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு திட்டங்களை தொடக்கி வைத்து வருகிறார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாநிலத்தின் மொத்த எம்பி தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்பதுதான் பாஜகவின் திட்டமாக இருக்கிறது. இந்நிலையில், அதற்கான தீவிர முயற்சியில் மத்திய மற்றும் மாநில பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட நிதி ஆகியவை பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல இந்த பட்ஜெட்டில் உட்கட்டமைப்பு, கல்வி மற்றும் மருத்துவம் உள்ளிட்ட துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது.

இதன்படி பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று (மார்ச் 29) கோரக்பூரில் ரூ.3838 கோடி மதிப்பில் 172 நலத்திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், "புதிய திட்டங்கள் மக்களுக்கு நம்பிக்கை அளிப்பது மட்டுமல்லாது, ஏராளமான வாய்ப்புகளையும் உருவாக்க வழி வகுக்கிறது" என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "இந்நகரம் புதிய திட்டங்களால் 'புது கோரக்பூராக' மாற இருக்கிறது. புது கோரக்பூரில் அகலமான சாலைகள், எய்ம்ஸ், உரத் தொழிற்சாலை, நான்கு வழிச்சாலை, ஆறு வழிச்சாலை, சுற்றுச் சாலைகள் என பல அம்சங்கள் இடம்பெறும்.
இது மட்டுமல்லாது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கோராக்பூருக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு வர இருக்கிறது. ஹோட்டல்கள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள், தொழிற்சாலைகள் ஆகியவை வர இருக்கின்றன. உத்தரப் பிரதேச மாநிலத்தின் தொழிலாளர்கள் ஒரு காலத்தில் வெளி மாநிலத்தில் சென்று வேலை செய்து வந்தார்கள். அவர்களை மற்ற மாநிலத்தவர்கள் மூன்றாம் தர மக்களாக பார்த்தனர். ஆனால், தற்போது நிலைமை மாறியுள்ளது. உத்தரப் பிரதேச இளைஞர்கள் தற்போது உத்தரப் பிரதேசத்திலேயே வேலை செய்கின்றனர். இந்நிலையை பாஜக அரசு மேம்படுத்தியுள்ளது.
தற்போது தொடங்கப்பட்டுள்ள இந்த புதிய திட்டங்கள் மூலம், நமது மாநில இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்பு கோரக்ப்பூரிலேயே கிடைக்கும். எனவே இந்த மாவட்ட மக்கள் வேறு மாவட்டங்களுக்கு கூட செல்ல வேண்டியதில்லை. மறுபுறம் கோரக்பூர் ரயில் நிலையம் மேம்படுத்தப்படும். இந்த ரயில் நிலையத்தின் கேன்டீன்கள் விமான நிலையத்தின் கேன்டீன்களை போல மேம்படுத்தப்படும். கல்வியை பொறுத்த அளவில் தற்போது கோரக்பூர் மாவட்டம் உத்தரப் பிரதேசத்தின் கல்வியின் மையமாக இருக்கிறது. தற்போது வரை 4 பல்கலைக்கழகங்கள் இங்கு இயங்கி வருகின்றன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்" என்று கூறியுள்ளார்












Click it and Unblock the Notifications