வாரிசு அரசியலை ஒழித்துக்கட்டியது பாஜக அரசுதான்! உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பெருமிதம்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் கடந்த கால ஆட்சியாளர்களின் வாரிசுகள் வளர்ச்சி நலத்திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியை கொள்ளையடித்தனர். ஆனால் பாஜக மக்களுக்காக உழைத்து வருகிறது என்று கூறியுள்ளார்.
உத்தப் பிரதேசத்தில் தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட தேர்தலை நாளை (மே11) நடைபெற உள்ள நிலையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று மிர்சாபூரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரையாற்றிய அவர், "கடந்த கால ஆட்சியில் குடும்ப அரசியலின் தலையீடு அதிகமாக இருந்தது. எனவே வளர்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட நிதி பெரும்பாலும் கொள்ளையடிக்கப்பட்டது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது கடந்த 2017ம் ஆண்டுக்கு முன்னர் மாநிலத்தில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டிருந்தது. குடிநீரை எடுக்க மக்கள் பல கீ.மீ வரை நடந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் வளர்ச்சி திட்டங்களுக்கு, குடிநீர் பஞ்சத்தை போக்கவும் ஒதுக்கப்பட்ட நிதியானது அப்போது ஆட்சியில் இருந்த ஆட்சியாளர்களின் குடும்ப உறுப்பினர்களாலும், வாரிசுகளாலும் கொள்ளையடிக்கப்பட்டன. ஒரு சொட்டு குடிநீருக்காக அலையவிட்ட ஆட்சியாளர்களை நீங்கள் ஒரு ஓட்டிற்காக அலைய வைக்க விட வேண்டும்.
2017க்கு பிறகு ஆட்சிக்கு வந்த பாஜக குடிநீர் பஞ்சத்தை போக்க ஏராளமான திட்டங்களை அமல்படுத்தியுள்ளது. இதன் மூலம் ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர். அதேபோல மாநிலத்தின் புனிதத்தை பாதுகாக்க ஏராளமான பணிகள் செய்யப்பட்டுள்ளன. மாநிலத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த புனித தலமான மா விந்தியவாசினி கோயிலை சுற்றி நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த புனித தலத்திற்கு அருகில் உள்ள ஜெட்டி அணையின் கட்டுமானங்கள் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டுவிட்டது. இந்த அணையிலிருந்து வரும் நீர் வேளாண் தொழிலுக்கு மிகுந்த பலனளிக்கிறது.
இது தவிர உத்தரப் பிரதேசத்தில் மருத்துவ வசதியும் அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது. மாநிலத்திற்கு ஒரு மருத்துவக் கல்லூரி என்பதுதான் பாஜக அரசின் இலக்கு. கடந்தகால ஆட்சியில் மாணவர்கள் உயர்கல்வி பயில வெளி மாவட்டங்களுக்கும், மாநிலங்களுக்கும் சென்றுக்கொண்டிருந்தனர். ஆனால் பாஜக இந்த நிலையை மாற்றியிருக்கிறது. இதற்காக கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் தேவையை விட அதிக அளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் எல்லாவற்றிற்கும் காரணம் பிரதமர் நரேந்திர மோடிதான். அவர் ஓர் உலக தலைவராக இருக்கிறார். உலகளாவிய நெருக்கடி ஏற்படும்போது அதை தீர்க்கும் நபராக மோடி இருக்கிறார்" என்று யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications