அதிமுக மாநாட்டில் உணவு சமைக்க 10000 பேர்! பரிமாற 5000 பேர்! டன் கணக்கில் அரிசி மூட்டைகள் -காய்கறிகள்
மதுரை: அதிமுக மாநாடுக்கு இன்னும் இரண்டு நாள் கூட முழுமையாக இல்லாததால் மதுரை வலையங்குளம் பகுதி இப்போதே திருவிழாக்கோலம் பூண்டுள்ளது.
அதிமுக மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் அவர்களுக்கான உணவு சமைக்கும் பணி மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நெல்லை கேட்டரிங் என்ற நிறுவனம் வசம் உனவு சமைக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. நேற்றிலிருந்து அந்த கேட்டரிங் டீம் சமைக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில் உணவு சமைக்க மட்டும் 10,000 சமையல் கலைஞர்களும், பரிமாறுவதற்கு 5,000 நபர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தனித் தனி தேக்சாக்களில் வெரைட்டி ரைஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. தயிர் சாதம், பிரிஞ்சி சாதம், சாம்பார் சாதம், தேங்காய் சாதம் என வெரைட்டி வெரைட்டியாக உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
இதற்காக டன் கணக்கில் அரிசி மூட்டைகளும், வெங்காயம், தக்காளி உட்பட காய்கறி மூட்டைகளும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. நாளை காலை முதல் மாநாட்டுத் திடலுக்கு வருவோரின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்பதால் நாளை அவர்களுக்கும் சேர்த்து சமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளன.

எல்லாவற்றையும் விட ஹைலைட்டாக நாளை மறுதினம் அடுப்பை அணைக்காமல் தொடர்ச்சியாக சமையல் பணிகள் நடைபெறவுள்ளன. இதற்காக முன்கூட்டியே கியாஸ் சிலிண்டர்கள் லோடு லோடாக கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டுள்ளன. இதனிடையே தொண்டர்களுக்கு மட்டும் தான் இந்த உணவு, அதிமுக முக்கியப் பிரமுகர்கள் அவரவர் தங்கும் விடுதிகளில் சாப்பிட்டுக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications