உள்ளாட்சி தேர்தலில்.. அ.தி.மு.க.வினருக்கு ஒற்றுமை மிக அவசியம்.. செல்லூர் ராஜூ சொல்கிறார்!
மதுரை: மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் உள்ளாட்சித்தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
சட்டமன்ற தேர்தலில் மற்ற தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை இழந்தது கூட கவலை அளிக்கவில்லை. மதுரை தெற்கு தொகுதியில் தோல்வியடைந்தது கவலையளிக்கிறது. தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

உண்மையாக உழைத்தோம்
அ.தி.மு.க எதிர்க்கட்சியாக இருந்த போது வெற்றி பெற்ற தொகுதி, முதல்முறையாக இரட்டை இலை வெற்றி பெற்ற தொகுதி மதுரை தெற்கு தொகுதி. மக்களுக்கு உண்மையாக உழைத்தோம். கொரோனா காலத்தில் வீட்டில் இல்லாமல் களத்தில் பணியாற்றினோம். தேர்தலில் மக்கள் வாய்ப்பளித்தால் வெற்றியடைவோம். இல்லையென்றால் பரவாயில்லை இருக்கட்டும் என நினைத்தோம். ஆனால் வெற்றியை தந்தார்கள்.

பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை
இதை எனது வெற்றியாக பார்க்கவில்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கோட்டையாக இருந்ததாலும், இரட்டை இலை சின்னத்திற்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன். நான் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதால் மக்கள் எங்களுக்கு வாக்களித்தார்கள். அ.தி.மு.க மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் பின்தங்கி விடவில்லை. தேர்தலில் 13 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் தான் பின்தங்கியது. அதில் நமது கூட்டணிக்கட்சிகள் நின்ற இடத்தில் 8 லட்சம் வாக்குகள் பின்தங்கியுள்ளோம்.

ஜெயலலிதா அள்ளி கொடுத்தார்
அ.தி.மு.க வெறும் 1 லட்சத்து 98 ஆயிரத்து வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஆட்சி பொறுப்பை இழந்தோம். பூத் கமிட்டி அமைக்க வேண்டும் என ஒபிஎஸ் இ.பிஎ.ஸ் கூறிய நிலையில், மதுரையில் ஒரு வார்டு செயலாளர், பகுதி செயலாளர் கூட பூத் கமிட்டி அமைக்கவில்லை. தி.மு.க ஆட்சியில் 5 முறை மதுரை மாநகராட்சி பொறுப்பில் இருந்துள்ளனர்.ஆனால் மதுரைக்கு ஒரு துரும்பை கூட கிள்ளி கொடுக்கவில்லை. ஆனால் கடந்த பத்தாண்டுகளில் மதுரைக்கு பத்தாயிரம் கோடிகளை அள்ளிக்கொடுத்தவர் ஜெயலலிதா.

மதுரையில் முன்னேற்றம்
நாம் தொடங்கி வைத்த முல்லைபெரியாறு அணை லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் மூலம் மதுரையில் உள்ள அனைவருக்கும் குடிநீர் கிடைக்க உள்ளது. மதுரையில் இன்னும் 35 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை வந்தாலும் தங்கு தடையின்றி குடிநீர் கிடைக்க உள்ளது. முல்லைப்பெரியாறு லோயர் கேம்ப் குடிநீர் திட்டம் நிறைவேறும் போது நாம் தான் மாநகராட்சி ஆட்சியில் இருக்க வேண்டும். ஏனென்றால் மதுரை மாநகராட்சி தலைமையில் தான் விழா நடைபெறும். வளர்ந்த நகருக்கு நிகராக மதுரையில் மேம்பாலங்களையும், பறக்கும் பாலங்களை கட்ட நடவடிக்கை எடுத்தோம்.

ஒற்றுமை வேண்டும்
வைகை ஆற்றில் இருபுறமும் கரைகளை எழுப்பி கழிவுநீர் கலக்காத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இன்னும் ஒரு வருடத்தில் வைகை கரையோரத்தில் பூங்காங்கள், ஜிம்கள் வர போகின்றன. ஆகவே மதுரை மாநகராட்சி மேயர் பதவியை நாம் பிடித்தால் தான் அனைத்தையும் தொடங்கி வைக்க முடியும். வரும் உள்ளாட்சித்தேர்தலில் ஒற்றுமையுடன் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications