முதல்வர் ஸ்டாலின் அவ்வளவு பேசியும் ஓயாத திமுக உட்கட்சி பூசல்- ராமநாதபுரம், மதுரையில் அக்கப்போர் அலை!
மதுரை/ ராமநாதபுரம்: திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் பொதுக்குழுவில் விடுத்த எச்சரிக்கையையும் மீறி மதுரை மற்றும் ராமநாதபுரம் திமுகவில் உட்கட்சி மோதலானது உச்சகட்டமாக வெடித்திருக்கிறது. பரமக்குடியில் கத்தி குத்து வரை சென்றிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திமுக பொதுக்குழு சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இப்பொதுக்குழுவில் திமுக தலைவராக 2-வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஸ்டாலின் எச்சரிக்கை
திமுக தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு ஏற்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், உட்கட்சி விவகாரங்கள் குறித்து உருக்கமாகவும் ஆதங்கமாகவும் பேசியிருந்தார். அப்போது, உட்கட்சி தேர்தலில் புதியவர்கள் சிலருக்கு வாய்ப்பளிக்க முடியவில்லை என்பதும் உண்மைதான். அப்படி வாய்ப்பைப் பெற முடியாதவர்கள் வருந்தவேண்டாம். வாய்ப்பு உங்களுக்கு மறுக்கப்படவுமில்லை, நீங்கள் மறக்கப்படவுமில்லை என்பதை தனித்தனியாக அவர்கள் ஒவ்வொருவருக்கும் நான் சொன்னதாக எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன். பொறுப்பில் அவர்கள் உட்கார வைக்கப்படவில்லை என்றாலும் - கழகத்தை வலிமைப்படுத்தும் பொறுப்பு அவர்களுக்குத்தான் அதிகமாக இருக்கிறது. புதிய நிர்வாகிகள் - பொறுப்புக்கு வர இயலாத அனைவரையும் அரவணைத்துச் செல்லுங்கள். அனைவர் ஆலோசனையையும் பெறுங்கள். சிலர் மற்ற நிர்வாகிகளோடு ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது இல்லை என்று நான் கேள்விப்படுகிறேன். இதை விட கட்சித் துரோகம் எதுவும் இருக்க முடியாது என கடுமையாக எச்சரித்திருந்தார்.

உதாசீனப்படுத்திய ராமநாதபுரம் திமுக
உட்கட்சி விவகாரம் குறித்து பகிரங்கமாக பொதுக்குழுவில் பேசுவது வழக்கம்தான். ஆனால் இந்த எச்சரிக்கை நேரலையாக- லைவ் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இது விவாதங்களையும் ஏற்படுத்தியிருந்தது. ஆனால் முதல்வரின் இந்த ஆதங்கம், அறிவுரை, எச்சரிக்கை எதனையையுமே ராமநாதபுரம் திமுக சட்டை செய்யாமல் உதாசீனப்படுத்தி இருக்கிறது என்பதுதான் அங்கு நடந்த கத்திகுத்து சம்பவம் காட்டுகிறது.

என்ன பஞ்சாயத்து?
ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளராக காதர்பாட்சா முத்துராமலிங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட போதே பல்வேறு எதிர்ப்புகள், சர்ச்சைகள் என அதகளப்பட்டது ராமநாதபுரம். எத்தனையோ எதிர்ப்புகளுக்குப் பின்னர் அசைக்க முடியாத மா.செ.வாக காதர்பாட்சா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் திரும்பினார். அவரது ஆதரவாளர்கள் அனல் பறக்கும் வசனங்களுடனான சுவரொட்டிகள் அச்சடித்து பிரமாண்டமான வரவேற்பும் கொடுத்தனர்.

எம்.எல்.ஏ. தரப்புடன் மோதல்
அப்படி ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் மன்ற ஐந்தாவது வார்டு திமுக கவுன்சிலர் பாக்கியராஜ் மாவட்டச் செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கத்தை வரவேற்று வைக்கப்பட்ட பதாகை இப்போது கத்தி குத்து வரை கொண்டு சென்றுவிட்டது. பாக்கியராஜ் வைத்த பேனரில் எம்.எல்.ஏ. முருகேசன் படம் இடம்பெறவில்லை என சர்ச்சை வெடித்தது. இது தொடர்பான மிரட்டல் ஆடியோக்களும் வெளியாகின.

கத்தி குத்து புகார்
இந்த நிலையில் திமுக கவுன்சிலர் பாக்கியராஜை மர்ம நபர்கள் நேற்று கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதனை அடுத்து பாக்கியராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கின் முதல் குற்றவாளியாக பரமக்குடி திமுக எம்எல்ஏ முருகேசன் மகன் துரைமுருகன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் 30 பேர் மீது பரமக்குடி நகர் போலீசார் கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் ராமநாதபுரம் திமுகவில் பெரும் பஞ்சாயத்து தொடர்ந்து கொண்டிருக்கிறது.

மதுரையில் வெடித்த பிடிஆர்
இதேபோல் மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், உட்கட்சி பூசல் குறித்து பகிரங்கமாகவே கொந்தளித்திருக்கிறார். மதுரையில் நிதி அமைச்சர் பிடிஆர் மா.செ. பதவியை எதிர்பார்த்ததாக கூறப்பட்டது. ஆனால் தளபதி, மா.செ.பதவியை கைப்பற்றினார். மதுரை திமுகவில் ஏற்கனவே அமைச்சர்கள் பிடிஆர், மூர்த்தி இடையே பகிரங்கமாக கோஷ்டி பூசல் நிலவி வருகிறது. இப்போது தளபதி கோஷ்டியும் தனி ஆவர்த்தனமாகிவிட்டது. இதனால்தான் மதுரை நிகழ்ச்சியில் பிடிஆர் நேற்று கொந்தளித்தார்.

என்ன நிகழ்ச்சி?
மதுரையில், முதல்வர் ஸ்டாலின் 2-வது முறையாக திமுக தலைவரானதை முன்னிட்டு விருந்து நிகழ்ச்சிக்கு அமைச்சர் பிடிஆர் ஏற்பாடு செய்தார். திமுக நிகழ்ச்சிதான் இது என்றாலும் வழக்கம் போல அமைச்சர் மூர்த்தி மற்றும் தளபதி கோஷ்டிகள் இதில் பங்கேற்கவில்லை. மேலும், ஸ்டாலின் பேச்சை மீறி சிலர் நன்றி மறந்துவிட்டனர். இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க வேண்டும் என மிரட்டல் விடுக்கின்றனர். நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவை இல்லை என்றெல்லாம் குமுறி இருக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பகிரங்கமாக உணர்வுப்பூர்வமாகவும் கடுமையாகவும் உட்கட்சி பூசல் குறித்து எச்சரித்தும் மதுரை, ராமநாதபுரம் திமுகவில் தலைவிரித்தாடும் கோஷ்டி பூசல்கள் எப்போது முடிவுக்கு வருமோ? என்பது அக்கட்சி தொண்டர்களின் ஆதங்கம்.












Click it and Unblock the Notifications