தேவர் தங்க கவசம் விவகாரம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு.! உடனே மதுரை பறந்த பொறுப்பாளர்! அடுத்து என்ன
மதுரை: தேவர் தங்கக் கவசம் தொடர்பாக ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து வேலைகள் நடைபெறத் தொடங்கி உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா அக். 28 முதல் 30 வரை கொண்டாடப்படும்.. இந்தாண்டும் இதற்கான ஏற்பாடுகள் பசும்பொன்னில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே தேவர் தங்கக் கவசம் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரு தரப்பும் நீதிமன்றத்தை நாடி இருந்தனர்.

தேவர் குரு பூஜை
கடந்த 2014இல் அதிமுக சார்பில் அதாவது பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் இருக்கும் சிலைக்கு 4.5 கோடி ரூபாய் மதிப்பில் 13.5 கிலோ எடையுள்ள தங்கக் கவசம் ஒன்று அணிவிக்கப்பட்டது. வங்கியில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த தங்கக் கவசம் தேவர் குரு பூஜை சமயத்தில் மட்டுமே வங்கியில் இருந்து எடுத்து வரப்படும். அதிமுக பொருளாளரிடம் தான் தங்கக் கவசம் ஒப்படைக்கப்படும்

ஐகோர்ட் உத்தரவு
இதனிடையே ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி என இரு தரப்பும் தங்கக் கவசத்தை தங்களிடம் தான் கொடுக்க வேண்டும் எனக் கோரினர். இது தொடர்பாக அவர்கள் நீதிமன்றத்திலும் கூட வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கில் தேவர் தங்கக் கவசத்தை ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டது.

தங்கக் கவசம்
தேவர் கவசத்தை வங்கியில் இருந்து பெற்று, அதைத் தேவர் சிலைக்கு அணிவித்து மீண்டும் அதை வங்கியில் ஒப்படைக்க வேண்டும் என்றும் இதற்கு போலீசார் தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதையடுத்து முத்துராமலிங்க தேவரின் தங்கக் கவசத்தை வங்கியிலிருந்து எடுக்க நினைவாலயத்தில் இருந்து பொறுப்பாளர் மதுரை புறப்பட்டுச் சென்றார்.

காந்தி மீனாள்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் 115வது ஜெயந்தி விழாவும் 60வது குருபூஜை விழாவும் கொண்டாடப்பட உள்ள நிலையில், ஐகோர்ட் உத்தரவைத் தொடர்ந்து தங்கக் கவசத்தைப் பெறப் பொறுப்பாளர் மதுரைக்கு விரைந்தார். இந்த தங்கக் கவசம் எப்போதும் மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் தான் வைக்கப்பட்டு இருக்கும். மதுரை வருவாய் அலுவலரும், நினைவிட பொறுப்பாளரும் இன்று மாலை அங்குச் சென்றனர்.

ஒப்படைப்பு
ஐகோர்ட மதுரை கிளை உத்தரவின்படி மதுரை பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்த முத்துராமலிங்க தேவர் தங்கக் கவசம் மதுரை வருவாய் அலுவலர் சக்திவேல் மற்றும் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனாளிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் வரும் தேவர் குருபூஜையின் போது, தங்கக் கவசத்தை முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அணிவிக்க உள்ளனர்.

முதல்முறை இல்லை
முன்னதாக 2017ஆம் ஆண்டிலும் இதேபோன்ற பிரச்சினை ஏற்பட்டது. அப்போது மூன்று அணிகளாக இயங்கிய எடப்பாடி, ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் என்று மூவரும் தங்கக் கவசம் கோரி கடிதம் எழுதினர். இதுவும் நீதிமன்றத்திற்குச் சென்றது. தங்கக் கவசத்தை யாருக்குக் கொடுத்தாலும் பிரச்சினை என்பதால் தேவர் நினைவிட பொறுப்பாளர் முன்னிலையில் மதுரை கலெக்டரிடம் இந்த தங்கக் கவசம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications