ஹைகோர்ட் ஆர்டருக்கு அப்புறம் மாணவி சோபியா சொன்னதை கவனிச்சீங்களா! டிரெண்டாகும் ட்வீட்
மதுரை: கடந்த 2018ம் ஆண்டு தூத்துக்குடி விமான நிலையத்தில் அப்போதைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் முன்பாக, மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய ஆராய்ச்சி மாணவி சோபியா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று மாணவி மீதான வழக்கை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனையடுத்து மாணவி சோபியா 'X' (ட்விட்டர்) சோஷியல் மீடியாவில் பதிவிட்டுள்ள போஸ்ட் டிரெண்டாகி வருகிறது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையிலிருந்து வெளியேறும் கழிவுகளால் ஏராளமான உடல்நல பாதிப்புகள் ஏற்படுத்துவதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு எதிராக ஆங்காங்கே சிறு சிறு போராட்டங்கள் நடைபெற்றன. இந்நிலையில் இது கடந்த 2018ம் ஆண்டு பெரும் போராட்டமாக வெடித்தது. தொடர்ந்து 100 நாட்கள் போராட்டம் நடைபெற்ற நிலையில் 100வது நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு எதிராக காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காவல்துறைக்கு எதிராகவும், ஸ்டெர்லைட் ஆலைக்கு மத்திய அரசு துணைபோவதாகவும் கூறி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் பற்றி எரிந்தது. இந்த சூழலில்தான் அப்போதைய பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையிலிருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வந்திருந்தார். இதே விமானத்தில் ஆராய்ச்சி மாணவி சோபியாவும் பயணித்திருந்தார்.
அப்போது விமானத்தை விட்டு கீழே இறங்கியபோது மாணவி சோபியா மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டுள்ளார். இது தமிழிசை சௌந்தரராஜனையும், அவரது ஆதரவாளர்களையும் எரிச்சலடைய வைத்திருக்கிறது. எனவே அவர்கள் இது தொடர்பாக போலீஸில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் மாணவி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் மாணவி இதை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடினார். நீதிமன்றத்தில், "நான் கனடாவில் மாண்ட்ரீல் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறேன்.
கடந்த 2019ம் ஆண்டு சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணம் செய்தேன். அதே விமானத்தில் அப்போதைய தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வந்தார். அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு பலர் உயிரிழந்த சம்பவம் நடைபெற்ற நேரம். இந்த சம்பவம் எனக்கு மிகுந்த வேதனை அளித்தது. எனவே, விமானத்தில் இருந்து இறங்கும்போது மத்திய அரசை விமர்சித்து கருத்து தெரிவித்தேன்.
அதைக் கேட்ட தமிழிசை சவுந்தரராஜன், விமான நிலையத்தில் என்னை மிரட்டும் நோக்கத்தில் என்னைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டினார். அவரது ஆதரவாளர்களும் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். ஆனால், அவரது புகாரின்பேரில் புதுக்கோட்டை போலீசார் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கின் கீழ் என் மீது நடவடிக்கை எடுக்க தடை விதிக்கவும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்" என்று மனு தாக்கல் செய்தார். ஆனால் இதற்கு தமிழிசை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மாணவி சோபியா மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை பலர் வரவேற்றிருக்கின்றனர். இந்நிலையில் உத்தரவுக்கு பின்னர் சோபியா 'X' (ட்விட்டர்) சோஷியல் மீடியாவில் எழுதியிருப்பது டிரெண்டாகி வருகிறது. அதாவது, "ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை என் மீதான எஃப்ஐஆர் மற்றும் குற்றப்பத்திரிகையை ரத்து செய்துள்ளது. பாசிசபாஜகஆட்சி_ஒழிக" என்று குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications