அக்னிபாத் எதிர்ப்பு- மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற 30 பேர் குண்டுகட்டாக கைது
மதுரை: மத்திய பாஜக அரசின் அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்பு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்றதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video
இந்திய ராணுவத்தில் அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் 4 ஆண்டுகால பணிக்காக ஆட்சேர்ப்பு நடைபெறும் என்பது மத்திய அரசின் அறிவிப்பு. இதற்கு எதிராக வட இந்தியாவில் இளைஞர்கள் பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
டெல்லி, பீகார், உ.பி, மேற்கு வங்கத்தில் அக்னிபாத் எதிர்ப்பு போராட்டம் உக்கிரமடைந்து வருகிறது. இதுவரை 60 ரயில்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன. இன்று நாடு தழுவிய பாரத் பந்த் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் 500க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இந்நிலையில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக, மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்டோர் மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக புறப்பட்டனர்.
மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பியபடி மதுரை ரயில் நிலையத்தை முற்றுகையிட அவர்கள் முயன்றனர். அப்போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 30 க்கும் மேற்பட்டோரை போலீசார் குண்டுகட்டாக கைது செய்தனர். இதனால் ரயில் நிலையம் செல்லும் சாலையில் அரை மணி நேரம் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


Click it and Unblock the Notifications
