வெளியவே நில்லுங்க..சிஆர்பிஎப்-க்கு மதுரை ED ஆபிஸில் அனுமதி மறுத்த தமிழக போலீஸ்! நள்ளிரவில் பரபரப்பு
மதுரை: ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் விடியவிடிய மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தியபோது துப்பாக்கி ஏந்தி சிஆர்பிஎப் வீரர்கள் வந்த நிலையில் அவர்களை உள்ளே விட மறுத்து வெளியவே நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் தான் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வரும் அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் உங்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது என கூறியுள்ளார்.
அதோடு விசாரணைக்கு ஆஜராக வரும்படி சுரேஷ் பாபுவிடம், அங்கித் திவாரி கூறியுள்ளார். அப்போது அந்த வழக்கு விசாரணையை கைவிட ரூ.3 கோடி தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு சுரேஷ் பாபு ஒப்புக்கொள்ளவில்லை. இதையடுத்து ரூ.51 லட்சம் மட்டுமே தரும்படி அங்கித் திவாரி கூறியுள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபு, அங்கித் திவாரியிடம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பணத்தை அங்கித் திவாரி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். பிற அதிகாரிகளுக்கு பணம் வழங்க வேண்டும். உடனடியாக ரூ.31 லட்சத்தை தர வேண்டும் என தொல்லை செய்துள்ளார். இதுபற்றி டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரை தொடர்ந்து சுரேஷ் பாபு நேற்று ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் வழங்கினார். இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
வசமாய் சிக்கிய ED அதிகாரி அங்கித் திவாரி.. 3 லேப்டாப்கள் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் பணியாற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அமலாக்கத்துறை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் விசாரணை அமைப்பாகும். இந்நிலையில் தான் முதல் முதலாக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நுழைந்து அதிரடி சோதனையை மேற்கொண்டனர்.
இதையடுத்து அங்கு சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டனர். தமிழக போலீசாரும் குவிக்கப்பட்டனர். மேலும் நள்ளிரவில் அங்கு சோதனை நடந்தபோது கோவையில் இருந்து கூடுதலாக சிஆர்பிஎப் வீரர்கள் துப்பாக்கியுடன் மதுரை வந்து இறங்கினர். அவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அப்போது அவர்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கி சிக்கிய நிலையில் சோதனை நடக்கிறது. இப்போது உள்ளே அனுமதிக்க முடியாது. உயரதிகாரிகளிடம் அனுமதி பெற்ற பிறகு தான் உள்ளே அனுமதிக்கப்படும் என தெரிவித்தனர்.
13 மணிநேரம்.. மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு.. சிக்கிய ஆவணங்கள்
இதனால் கோவையில் இருந்த வந்த சிஆர்பிஎப் வீரர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டு இருந்த வாகனத்திலேயே இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று மாலை 6 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் தொடங்கிய சோதனை என்பது விடியவிடிய நடந்தது. 13 மணிநேரம் கழித்து இன்று காலையில் 7 மணிக்கு இந்த சோதனை நிறைவு பெற்றது. சோதனையின் முடிவில் சில முக்கிய ஆவணங்களை போலீசாரிடம் சிக்கியதாக கூறப்படுகிறது.
முன்னதாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து அங்கு நேற்று இரவு முழுவதும் சிஆர்பிஎப் வீரர்கள் குவிக்கப்பட்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications