வசமாய் சிக்கிய ED அதிகாரி அங்கித் திவாரி.. 3 லேப்டாப்கள் பறிமுதல்! லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி
மதுரை: ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கிய வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதையடுத்து மதுரையில் உள்ள அவரது வீடு மற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்திய நிலையில் அங்கித் திவாரியின் 3 மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் டாக்டராக இருப்பவர் சுரேஷ் பாபு. இவர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் தான் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருபவர் அங்கித் திவாரி என்பவர் சுரேஷ் பாபுவை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அப்போது அவர் உங்கள் மீதான வழக்கை மீண்டும் விசாரிக்க பிரதமர் மோடி அலுவலகத்தில் இருந்து உத்தரவு வந்துள்ளது. விசாரணைக்கு ஆஜராக வரும்படி கூறியுள்ளார். இதையடுத்து சுரேஷ் பாபு விசாரணைக்கு சென்ற நிலையில் அவரிடம் லஞ்சம் கேட்டுள்ளார் அங்கித் திவாரி.
அதாவது அவர் மீதான விசாரணையை கைவிட ரூ.3 கோடி தர வேண்டும் என தெரிவித்துள்ளார். இதற்கு சுரேஷ் பாபு மறுத்துள்ளார். இதையடுத்து லஞ்சப்பணம் குறைத்து கொள்ளப்பட்டுள்ளது. அதாவது ரூ.51 லட்சத்தை தந்தால் வழக்கு விசாரணையை கைவிடுவதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து முதற்கட்டமாக ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபு, அங்கித் திவாரியிடம் வழங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மீதமுள்ள பணத்தை கேட்டு அங்கித் திவாரி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். அதாவது பிற அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும். இதனால் மீதமுள்ள ரூ.31 லட்சத்தை தர வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவுளை எதிர்கொள்ள நேரிடும் என மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் டாக்டர் சுரேஷ் பாபு திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புப் போலீசில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அறிவுரையில் சுரேஷ் பாபு நேற்று ரூ.20 லட்சத்தை அங்கித் திவாரியிடம் நேற்று வழங்கினார். அந்த பணத்தை அங்கித் திவாரி வாங்கி கொண்டு நேற்று மதுரை புறப்பட்ட நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரது கார் மற்றும் ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
இதையடுத்து அங்கித் திவாரியிடம் 15 மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து அவர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே தான் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் வீடு மற்றும் அவர் பணியாற்றும் மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர்.
மதுரையில் உள்ள அவரது வீட்டில் சில மணிநேரம் சோதனைகள் நடந்தது. அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 7 மணி வரை 13 மணிநேரம் சோதனை நடந்தது. இந்த வேளையில் பல ஆவணங்கள் சிக்கி உள்ளனர். குறிப்பாக இந்த சோதனைகளின்போது அங்கித் திவாரியின் 3 லேப்டாப்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த லேப்டாப்களை ஆய்வு செய்தால் இன்னும் சில முக்கிய தகவல்கள் கிடைக்கலாம் என லஞ்ச ஒழிப்பு போலீசார் நம்புகின்றனர்.












Click it and Unblock the Notifications