மதுரை வந்தார் அமித் ஷா.. முக்கிய தலைவர்களை சந்திக்க திட்டம்.. நாளை பாஜக கூட்டம்
மதுரை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு ராணுவ விமானத்தில் மதுரை வந்தார். மதுரையில் நாளை நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார் அமித் ஷா. மதுரையில் கூட்டணி தொடர்பாக முக்கிய அரசியல் தலைவர்களையும் அமித் ஷா சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் பரபரக்கின்றன.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மதுரை வருகிறார் அமித் ஷா
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலையொட்டி அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. அந்தவகையில் பாஜகவும் தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி ராணுவ விமானத்தில் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டார். இரவு 10.30 மணியளவில் மதுரை விமான நிலையத்துக்கு வருகை தந்தார். அமித்ஷவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட பிற தலைவர்கள் வரவேற்றனர். அதன்பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பாதுகாப்புடன் அமித்ஷா சென்றார். அங்கு தான் இரவு தங்குகிறார்.
மீனாட்சி அம்மன் கோவில்
நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் வேலம்மாள் திடலில் நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறார். இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.
அமித் ஷா வருகையால்
இந்தக் கூட்டம் நடைபெறும் இடத்தில் மேடை அமைக்க பந்தல்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மதுரை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து பந்தல்கால் ஊன்றினர்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகையையொட்டி, பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் வனிதா, இனிகோ திவ்யன், விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்ல இருப்பதால், அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதேபோல பாஜக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளின் தலைவர்களுடன் சந்திப்பு
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அமித் ஷாவை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. பாஜக தமிழக தலைவர்கள் டிடிவி தினகரனும், ஓபிஎஸ்ஸும் ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளனர் எனக் கூறி வருகின்றனர். எனினும், அதிமுக தரப்பில் இதுதொடர்பாக எதுவும் உறுதிசெய்யப்படவில்லை. எனவே இவர்களின் சந்திப்பு கூட்டணியை உறுதிப்படுத்தும் எனக் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications