பாமக கூட்டணி பற்றி பேச முடியாது.. விஜய்யுடன் பேச்சுவார்த்தை நடக்கிறதா? அன்புமணி கொடுத்த அப்டேட்!
மதுரை: பாமகவின் கூட்டணி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் இருப்பதாக கூறிய அன்புமணி, கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே இருக்கும் சூழலில், பாமக தலைவர் அன்புமணி பல்வேறு மாவட்டங்களுக்கும் பயணம் மேற்கொண்டு தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். ஏற்கனவே அன்புமணி மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சூழலில், சவுமியா அன்புமணியும் சுற்றுப்பயணத்தை தொடங்கி இருக்கிறார்.

ஆனால் பாமகவினர் ராமதாஸ் மற்றும் அன்புமணி என்று இரு தரப்பாக பிரிந்திருக்கின்றனர். இது அந்த கட்சிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. அதேபோல் பாமக தலைவர் அன்புமணி திமுகவை கடுமையாக விமர்சித்து வருகிறார். இதனால் அதிமுக - பாஜக கூட்டணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப பாஜக நிர்வாகி பைஜெயந்த் பாண்டாவுடன் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார்.
அப்போது பாமக தரப்பில் 29 தொகுதிகள் வரை கேட்டதாக சொல்லப்பட்டது. அதற்கு அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் ஒப்புக் கொள்ளவில்லை என்று பார்க்கப்படுகிறது. இதனால் பாமக கூட்டணியை இறுதி செய்ய முடியாமல் அதிமுக மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் அமைதி காத்து வருகின்றன. ஆனால் அன்புமணி 29 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் வரை அதிமுக ஒதுக்கியது. அதில் 5 தொகுதிகளில் மட்டுமே பாமக வென்றது. அதேபோல் பாஜகவை விட அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதிலும் அன்புமணி குறியாக உள்ளார். இந்த நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி கூட்டணி தொடர்பாக பேசி இருக்கிறார்.
அதில் அன்புமணி பேசுகையில், விரைவில் எங்கள் கூட்டணியை அறிவிப்போம்.. தேர்தலுக்கு 2 மாதங்கள் இருக்கிறது.. பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறோம். இந்த தேர்தலில் திமுக படுதோல்வி அடையும்.. எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி அடையும்.. கூட்டணி பற்றி எதுவும் என்னால் பேச முடியாது.. உறுதியாக இன்னும் சில நாட்களில் கூட்டணி உறுதியாகும்.
பலமான கூட்டணி, மெகா கூட்டணி உறுதியாகும். நிச்சயமாக வெற்றிபெறும் என்று தெரிவித்தார். தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்யக் கூடாது. அதுதான் எங்கள் நிலைப்பாடு.. அதேபோல் நீதிமன்ற தீர்ப்பை அரசு மதிக்க வேண்டும். சட்டம் ஒழுங்கு பிரச்சனை இல்லாத சூழலை உருவாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications