மதுரை சித்திரை திருவிழாவில் அன்னதானம்..சுகாதாரத்துறை அனுமதி அவசியம்..அமைச்சர் மா.சுப்ரமணியன்
மதுரை: சித்திரை திருவிழாவின்போது இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், நீர்மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார். அன்னதானங்களை சுகாதாரத்துறை அனுமதி பெற்று தான் வழங்கவேண்டும் எனவும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் சித்திரை திருவிழா கடந்த 22ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகமும், நாளைய தினம் திக் விஜயமும், மே 2ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது. 3ஆம் தேதி திருத்தேரோட்டமும், 5ஆம் தேதி சித்ரா பவுர்ணமி நாளில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவமும் நடைபெறும்.

பக்தர்களுக்காக பலரும் நீர் மோர், ரோஸ் மில்க், அன்னதானம் போன்றவைகளை வழங்கி வருகின்றனர். இந்த உணவுகள் சுகாதாரமான முறையில் இருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சித்திரை திருவிழாவிற்கு செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக மதுரை வந்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார், அப்போது அவர், மதுரை சித்திரை திருவிழாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடுவார்கள். இதனை கருத்தில் கொண்டு தொற்றுநோய் பாதிப்பு வராத வண்ணம் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருவிழாவை முன்னிட்டு மதுரையில் குடிநீர் சுகாதாரமாக வழங்க ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நகரில் கொசுத்தொல்லை இல்லாத வண்ணம் மாநகராட்சி மூலம் அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. திருவிழாவின்போது இலவசமாக பக்தர்களுக்கு வழங்கப்படும் உணவு பொருட்கள், நீர்-மோர் உள்ளிட்ட குளிர்பானங்கள் தரம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.

அன்னதானங்களை சுகாதாரத்துறை அனுமதி பெற்று தான் வழங்கவேண்டும். இவர்கள் உணவு மற்றும் குளிர்பானங்களில் செயற்கை நிறமிகள் பயன்படுத்தப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்து தரமற்ற உணவுகளை விநியோகம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.
கடந்த ஆண்டு 20 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு 56 இடங்களில் முகாம்கள் அமைக்கப்படும். தனியார் மருத்துமனைகள் மருத்துவ கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications