அய்யோ.. எத்தனை கொடுமை? ஓடும் பஸ்சில் இருந்து குதித்து பலியான பெண்ணின் குடும்பத்தில் இன்னொரு சோகம்!
மதுரை : பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள்.. அப்படி 5 பெண் குழந்தைகளின் தாய், ஓடும் பஸ்ஸில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட குடும்பத்தில் நடந்திருக்கும் ஒரு சோக நிகழ்வு கிராமத்தினரை துன்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான்பட்டியைச் சேர்ந்தவர் கணேசன் (38). இவரது மனைவி நாகலட்சுமி (31). இவர்களுக்கு 5 பெண் குழந்தைகள் உள்ளனர். குடும்பத்தில் போதிய வருமானமின்றி குழந்தைகளை வளர்க்க நாகலட்சுமி மிகவும் சிரமப்பட்டார்.

இதையடுத்து வேலை கேட்டு மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். கலெக்டரின் பரிந்துரையின்பேரில் மையிட்டான்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளர் வேலை நாகலட்சுமிக்கு வழங்கப்பட்டது. அவர் ஒன்றரை ஆண்டாக வேலை செய்து வந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு நாகலட்சுமியை மையிட்டான்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் சிலர், ஊராட்சி எழுத்தர் முத்து ஆகியோர் அவரை வேலை செய்யவிடாமல் தடுத்ததோடு இனி வேலை தர முடியாது என மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் மனமுடைந்து ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.
ஆட்சியர் வழங்கிய பணியை செய்யவிடாமல் தடுத்ததால் மனமுடைந்த 5 பெண் குழந்தைகளின் தாய் நாகலட்சுமி ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் அசிங்கப்படுத்தி போலீசார் தன்னை தற்கொலைக்குத் தூண்டியதாக அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
தாய் தற்கொலை செய்து கொண்டதால் 5 குழந்தைகளும் கதறி அழுத காட்சி அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மனைவி தற்கொலை செய்துகொண்டதையடுத்து கணேசன் தனது 5 மகள்களையும் பராமரித்து வளர்த்து வந்தார்.
இந்நிலையில், கணேசன் தோட்ட வேலைக்குச் சென்ற நிலையில், அவரது மகள்கள் வீட்டில் இருந்துள்ளனர். வீட்டின் பின்புறம் உள்ள தொட்டியில் 2வது மகள் விஜயதர்ஷினி (9), 4வது மகள் சண்முகப்பிரியா (4) இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது விஷப்பாம்பு இருவரையும் கடித்துள்ளது.
இதையடுத்து சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீண்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 4 வயது சிறுமி சண்முகப்பிரியா உயிரிழந்தார்.
மற்றொரு சிறுமி விஜயதர்ஷினிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாய் தற்கொலை செய்துகொண்ட சில மாதங்களில் மகள் பாம்பு கடித்து பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications