வெடித்தது போராட்டம்! ஜல்லிக்கட்டில் ஜாதி பாகுபாடு! பாலமேட்டில் கருப்பு கொடி ஏற்றிய தலித் சமூகத்தினர்
மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டில் ஜாதி பாகுபாடு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தலித் சமூகத்தினர் தங்களது கோயில் காளை ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படாததால் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதனால், பாலமேடு கிராமத்தில் தலித்துகள் வீடுகளில் கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டுள்ளன.
பாலமேடு விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஸ்டாலின், வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி மீது ஜாதி பாகுபாடு செய்ததாக குற்றம் சாட்டி வழக்கு தொடரப்போவதாக தெரிவித்துள்ளார்.

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 8 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. 1000 காளைகள் , 900 மாடுபிடி வீரர்கள் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில் பல்லாயிரக் கணக்கானோர் கண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பாலமேடு கிராமத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்பு கொடி கட்டி ஜல்லிக்கட்டு புறக்கணிப்பில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலமேட்டில் அனைத்து சமுதாய உறவின் முறைக்கு சொந்தமான கோயில்களில் காளைகளை மேற்படி ஜல்லிக்கட்டு விழாவில் கலந்து கொள்வது கிராம பாரம்பரிய வழக்கமாக உள்ளது. அதன்படி ஜல்லிக்கட்டு தொடங்கிய பின் பாலமேடு கிராம கமிட்டி சார்பாக ஏழு கோயில் மாடுகள் அவிழ்த்து விடப்பட்டன. ஆனால் பல வருடங்களாக பாலமேடு தலித் சமூகத்தை சேர்ந்த பாறை கருப்பசாமி கோவில் காளையை, சாதிய தீண்டாமை (jallikattu caste issue) காரணமாக பாலமேடு பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி தடை விதித்துள்ளது என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் வழக்குத் தொடர்ந்ததை அடுத்து கடந்த இரண்டு வருடங்கள் தங்கள் சமூகத்தை சேர்ந்த இரண்டு நபர்களுக்கு பாலமேடு ஜல்லிக்கட்டில் மரியாதை செய்யப்பட்டது. ஆனால் இந்த வருடம் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த யாருக்கும் மரியாதையும் செய்யவில்லை, எங்கள் கோவில் காளையை விடவும் அனுமதிக்கவில்லை. இது தொடர்பாக அமைச்சரிடம் பலமுறை தெரிவித்தும், அவர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஜாதிய பாகுபாடு அதிகம் பார்க்கும் அந்த அமைச்சர் மீது வழக்கு தொடுக்க உள்ளோம். வரும் தேர்தலில் இந்த அமைச்சர் தொடர்புடைய திமுக கட்சிக்கு வாக்கு அளிக்கப் போவதில்லை என கிராம மக்கள் தெரிவித்தனர்.

தலித் சமூகத்தினரின் போராட்டம் பாலமேடு கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜல்லிக்கட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், கருப்பு கொடிகள் ஏற்றப்பட்டிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications