அதிமுக பாஜக கூட்டணிக்கு 3வது இடம்தான்.. அப்ப 2வது இடம் யாராம்.. மாணிக்கம் தாகூர் ட்விஸ்ட்
மதுரை: சட்டமன்ற தேர்தல் அறிவிப்பிற்கான கவுண்டவுன் தொடங்கிவிட்டது. அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆட்சியை தக்க வைக்க திமுகவும், ஆட்சியை பிடிக்க அதிமுக கூட்டணியும் முயற்சி செய்கின்றன. அதனுடன் நாம் தமிழர், தவெக கட்சிகளும் களத்தில் மல்லு கட்டுகிறார்கள். பிரதமர் மோடி நேற்று தமிழ்நாடு வந்த நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், தேசிய ஜனநாயக கூட்டணியை கடுமையாக விமர்சித்துள்ளார். "இது சிபிஐ உருவாக்கிய கூட்டணி. தேர்தலில் அவர்களுக்கு மூன்றாம் இடம் தான் கிடைக்கும்" என்றும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தொடர்ந்து தமிழகத்தை ஏமாற்றுவதிலும், தமிழர்களை ஏமாளிகளாக மாற்றுவதிலும் பாஜக குறியாக உள்ளது. நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் அதிமுக பழனிசாமி, அமமுக டிடிவி தினகரன், பாமக அன்புமணி ஆகியோர் ஒன்றாக இருந்தனர். இவர்கள் அனைவருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளது. அது சிபிஐ வழக்கு.

சிபிஐ உருவாக்கிய கூட்டணி
அன்புமணி, தினகரன், எடப்பாடி எல்லோர் மீதும் சிபிஐ வழக்குகள் உள்ளன. கூட்டணி கட்சிகளை கொண்டு வர வேண்டிய பொறுப்பு சிபிஐக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணிக்கு என்டிஏ என்பதற்கு பதிலாக சிபிஐ கூட்டணி என்று வைத்திருக்கலாம். இது சிபிஐ அதிகாரிகளால் மிரட்டி உருவாக்கப்பட்ட கூட்டணி. இது மக்களுடைய நம்பிக்கையை இழந்துவிட்டது. அவர்கள் மூன்றாவது இடத்திற்கே தட்டி தடுமாறி தான் வருவார்கள்.
இந்தக் கூட்டணியை பொறுத்தவரை பணம் அதிகமாக உள்ளது. அதிகாரிகள் நிறைய உள்ளனர். இந்தி பேசுகிற முதலாளிகள் அதிகம் உள்ளனர். இந்த பலத்துடன் அவர்கள் தேர்தலுக்கு வரப்போகிறார்கள். திருப்பரங்குன்றம், திருமங்கலம் எம்எல்ஏக்களும் தட்டு தடுமாறி மூன்றாம் இடத்திற்கு தான் வருவார்கள். மக்கள் நம்பிக்கையை பெறாமல், பணம் மற்றும் அதிகாரிகளை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கிறார்கள்.
தோற்கடிக்கப்பட வேண்டும்
இந்தக் கூட்டணி தோற்கடிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் வேரூன்றுவதற்காக பாஜக தொடர்ந்து முயற்சித்து வருகிறது. கடந்த தேர்தலில் பாஜகவில் 4 பேர் வெற்றி பெற்று எம்எல்ஏக்களாகியுள்ளனர். அவர்கள் 4 பேரும் இந்தமுறை தோல்வியடைய வேண்டும். மக்கள் அவர்களுக்கு சரியான பாடம் கற்பிப்பார்கள். பாஜகவிற்கு எதிரான மனநிலை அதிகமாகவுள்ளது. 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் மோடி அரசு தமிழக மக்களை வஞ்சிக்கிறது.
மோடி அரசின் தவறான பொருளாதார கொள்கையால் சிறு குறு நிறுவனங்கள் பெரும் நெருக்கடியில் பாதிக்கப்பட்டுள்ளனர். பாஜக எந்தக் கூட்டணியில் இருந்தாலும் அவர்களுக்கு மூன்றாவது இடம் தான். இந்தமுறை அந்தப் பரிசு அதிமுக கூட்டணிக்கு வரப்போகிறது. தேர்தலில் யார் இரண்டாம் இடம் வரப்போகிறார்கள் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள்.
என்ன மொழியில் பேசினார்கள்
நேற்றைய கூட்டத்தில் மோடியும், பழனிசாமியும் என்ன மொழியில் பேசிக் கொண்டார்கள் என்று ஆச்சர்யமாக உள்ளது. சிரித்து சிரித்து பேசினார்கள். பழனிசாமிக்கு இந்தி தெரிய தொடங்கிவிட்டதா. மோடிக்கு ஆங்கிலம் தெரிந்துவிட்டதா. அப்படியென்றால் அவர் ஏன் மேடையில் ஆங்கிலத்தில் பேசவில்லை. இல்லையென்றால் தமிழ்நாட்டில் இந்தியில் தான் பேசுவேன் நீங்கள் அதைத்தான் கேட்க வேண்டும் என நினைக்கிறார்களா. இந்த ஆவணத்தை நான் கண்டிக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications