ஜல்லிகட்டு ஆர்டர் வாங்குனவரு பின்னால.. இன்பநிதி முன்னாலயாம்.. பிஆருக்காக பாஜக, தவெக பஞ்சாயத்து!
மதுரை: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அவரது மகன் இன்பநிதியும், அவர்களது நண்பர்களும் கலந்து கொண்டனர். இன்பநிதி முன் வரிசையில் அமந்திருக்க, ஜல்லிகட்டுக்காக வழக்கு தொடர்ந்த பிஆர் என அழைக்கப்படும் பி.ராஜசேகர் நிற்க வைக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை தவெகவும், பாஜகவும் கையிலெடுத்து சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
பி.ஆர் என அழைக்கப்படும் ராஜசேகர் நீண்ட காலமாக ஜல்லிக்கட்டு துறையில் பயணிப்பவர். குறிப்பாக ஜல்லிக்கட்டு தடைக் காலத்தில் டெல்லி வரை சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு அனுமதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக ஒவ்வொரு ஆண்டும் தைத் திங்கள் முதல் நாள் முதல் ஜல்லிக்கட்டு போட்டி மதுரையில் நடத்தப்படுகிறது. அவனியாபுரம் பகுதியில் ஜனவரி 14-ஆம் தேதியும்,15ஆம் தேதி பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ளது.
16ஆம் தேதியன்று காணும் பொங்கல் நாளன்று உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் பகுதியில் வெகு விமர்சையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம். இந்த போட்டிகளைக் காண ஆயிரக்கணக்கான மக்கள் திரள்வார்கள்.
இந்த போட்டிகளில் பங்கேற்பதற்காக மதுரை மட்டுமல்லாது திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளைகளின் உரிமையாளர்கள் மாடுபிடி வீரர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். இந்த ஆண்டு நடைபெறக் கூடிய ஜல்லிக்கட்டு போட்டிக்காக ஆன்லைன் பதிவு கடந்த 7ஆம் தேதி தொடங்கி 8ஆம் தேதி நிறைவு பெற்றது. அதில், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 5786 ஜல்லிக்கட்டு காளைகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.
அதேபோன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு 1698 மாடுபிடி வீரர்கள் பதிவு செய்தனர். அவர்கள் ஆன்லைன் பதிவு சான்றிதழை காண்பிக்கும் போது டோக்கன் வழங்கப்பட்டது. அதே நேரத்தில் மருத்துவ பரிசோதனை, எடை சரிபார்ப்பு உள்ளிட்டவற்றுக்குப் பிறகு மாடு பிடி வீரர்களுக்கும் ஜல்லிக்கட்டு காளைகளும் களமிறக்கப்பட்டன. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஒன்பது சுற்றுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் களமிறக்கப்பட்ட நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த போட்டியில் 545 வீரர்கள் முன்பதிவு செய்த நிலையில் 55 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 490 பேர் தகுதி பெற்ற நிலையில் 400 மாடுபிடி வீரர்கள் மட்டுமே களம் காண முடிந்தது. 90 வீரர்கள் நேரமின்மை காரணமாக சீருடை பெற்றுக் கொண்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அவரது மகன் இன்பநிதியும் கலந்து கொண்டார், தற்போது அது தான் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. முதல் வரிசையில் இன்பநதி, உதயநிதி உடன் அமைச்சர் மூர்த்தி அமைச்சர், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் அமர்ந்திருந்தனர். பின்வரிசையில் ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் பி.ராஜசேகர் நின்று கொண்டிருந்தார்.
பி.ஆர் என அழைக்கப்படும் ராஜசேகர் நீண்ட காலமாக ஜல்லிக்கட்டு துறையில் பயணிப்பவர். குறிப்பாக ஜல்லிக்கட்டு தடைக் காலத்தில் டெல்லி வரை சென்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து ஜல்லிக்கட்டு அனுமதி பெறுவதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் பி.ஆர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் நன்கு அறியப்பட்ட பிஆர், இன்ப நிதிக்காக பின் வரிசையில், அதுவும் நிற்கவைக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் நிற்கவைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரது விளக்கத்தால் அந்த சர்ச்சை முடிவுக்கு வந்தது. ஆனால் வயதில் மூத்த வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடங்கி, வழக்கு வரை ஜல்லிக்கட்டுக்காக உழைத்த ராஜசேகர் நிற்க வைக்கப்பட்டது எப்படி என ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும் இந்த விவகாரத்தை தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும், பாஜக நிர்வாகிகளும் கையில் எடுத்திருக்கின்றனர்.
ட்விட்டரில் உதயநிதியும் இன்பநிதியும் அமர்ந்திருக்கும் புகைப்படங்களையும் ராஜசேகர் நின்றிருக்கும் புகைப்படங்களையும் பாஜகவினர் ரவுண்டு செய்து வெளியிட்டு விமர்சித்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக துணைத் தலைவரான கேஎஸ் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில்,”ஜல்லிக்கட்டு வரலாற்றில் உச்சநீதி மன்றம் சென்று போராடி வழக்காடி வெற்றி தீர்ப்பு பெற்ற ஜல்லிகட்டு பேரவை மாநில தலைவர் பி .ராஜசேகர் அய்யா அவர்களை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதான அரங்கத்தில், வயதில் மூத்தவரான அவரை நிற்க வைத்து கலைஞரின் வாரிசு என்ற ஒரே தகுதியின் அடிப்படையில் இன்பநிதியை அமர வைத்து பார்ப்பது என்பது மிகுந்த வருத்தமளிக்கும் சமூக நீதி !!!” என விமர்சித்துள்ளார்.












Click it and Unblock the Notifications