டாக்டர் சரவணன் இருக்காரே.. டிரோனை எடுத்தார்.. மருந்தை தெளித்தார்.. திருப்பரங்குன்றமே அசந்து போனது!
திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணனின் புது முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்
மதுரை: டாக்டர் சரவணன் இருக்காரே.. கொரோனாவுக்கு எதிராக எதையாவது செய்து கொண்டே இருக்கிறார்.. அந்த வகையில் புதுசா ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளார்.. டிரோன் மூலம் கிருமி நாசினியை திருப்பரங்குன்றம் முழுதும் தெளிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்.. திமுக எம்எல்ஏவின் இந்த செயல் அனைத்து கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனாவைரஸ் நுழைவதற்கு முன்பிருந்தே இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க குரல் கொடுத்தவர்களில் எம்எல்ஏ சரவணனும் ஒருவர்.
திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ... வைரஸ் பரவல் அவ்வளவாக தமிழகத்தில் நுழைவதற்கு முன்பேயே மானிய கோரிக்கை விவாதத்திற்காக சட்டப்பேரவைக்கு மாஸ்க்குடன் வந்து பெரும்பாலானோர் கவனத்தை ஈர்த்தவர்!!

புது முயற்சி
அதேபோல, கொரோனா வைரஸ் குறித்து கட்சிக்கு ஒருவர் என்ற முறையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் குறித்து பேசும்போது, திமுக சார்பில் பேசியவரும் டாக்டர் சரவணன்தான்! "கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க மாஸ்க்குகளின் விலையை கட்டுப்படுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும், மருத்துவ படிப்பிற்காக சீனாவில் வசிக்கும் தமிழக மாணவர்களின் நிலை என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கவேண்டும்" என்று அவையில் கேட்டுக் கொண்டவரும்கூட!

கிருமிநாசினி
இந்நிலையில், தன் தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முன்னின்று கவனித்து வருகிறார்.. தீயணைப்பு வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்க ஏற்பாடு செய்ததுடன், முதல் கட்டமாக விரகனூர், சிந்தாமணி பகுதிகளில் கிருமிநாசினி மருந்தையும் தெளித்தார்.

டிரோன்
இதற்கடுத்தபடியாக, டிரோன் மூலம் கிருமிநாசினி மருந்தை தெளிக்கும் புது முயற்சியில் இறங்கி உள்ளார்.. திருப்பரங்குன்றம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக டிரோன் மூலம் கிருமி நாசினி மருந்து தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அவனியாபுரம் பகுதி முழுவதும் பரவலாக தெளிக்கப்பட்டது.

பாராட்டு
10 லிட்டர் அளவிலுள்ள கிருமிநாசினி மருந்து தொடர்ந்து நிரப்பப்பட்டு ஒரு நாளைக்கு 300 லிட்டர் வீதம் தொகுதி முழுவதும் தெளிக்கப்படுகிறது... அதேபோல, கிராமங்கள், ஊராட்சி, நகர பகுதிகள் என அனைத்து பகுதிகளிலும் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது... ஒரே நேரத்தில் 10 லிட்டா் கிருமிநாசினியை சுமந்து சென்று, வானிலிருந்து தெளிக்கும் வகையில் இந்த டிரோன் வடிவமைக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏவின் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்!












Click it and Unblock the Notifications