"காவி".. மேடையில் திடீர்னு தடுமாறிய அண்ணாமலை.. "அண்ணா, விடுங்கண்ணா".. ஹைலைட்டே அந்த மஞ்சள் சட்டைதான்
மதுரை: பாஜகவின் 8 ஆண்டு கால சாதனையை விளக்குவதற்காக, மதுரையில் கூட்டம் நடத்தப்பட்டால், இந்த மதுரை கூட்டமே ஒரு சாதனையாகிவிட்டது.. டெல்லி வரை பேசப்பட்டு வருகிறதாம்..!
மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்ற பாஜக அரசின் 8 ஆண்டு சாதனை விளக்க பொது கூட்டத்தில் மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அண்ணாமலை பேசும்போது, வழக்கம்போல் திமுக அரசையும், திமுக அமைச்சர்களையும் விமர்சித்து பேசினார்.. மூத்த அமைச்சர்கள் என்றெல்லாம் அண்ணாமலை பார்க்கவில்லை.. ஆர்எஸ் பாரதி முதல் டிஆர் பாலு வரை குறிப்பிட்டு விமர்சித்தார்.
உ.பி. பாஜக அரசால் புல்டோசர்கள் மூலம் வீடுகள் இடிப்பு விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

டிஆர் பாலு
"பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நூதனமான ஊழலை ஆரம்பித்திருக்கிறார்.. தூத்துக்குடியில் 2,500 ஏக்கர் நிலத்தை போலியாக பதிவு செய்தது கூட தெரியாமல், மதுரையில் ஜல்லி, மணல் எங்கு கிடைக்கும் என்று தேடிக் கொண்டு இருக்கிறார்... டி.ஆர். பாலு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டிக்குள் கொண்டு வர வேண்டும் என்கிறார்... ஆனால், பி.டி.ஆர். ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர கூடாது என்கிறார். முதல்வர் துபாய் போய்வந்த பிறகு, அமைச்சர்கள் எல்லோரும் வெளிநாடுகளுக்கு போய் கொண்டிருக்கிறார்கள்..

அணில்
மின்துறை அமைச்சர் இப்போது ஸ்காட்லாந்து கடலில் காற்றாலை அமைப்பதை பார்வையிட போயிருக்கிறார்.. கடலில் காற்றாலை போட்டால் அணில் ஏறி போய் கடிக்க முடியாது. வேலை இல்லாத காங்கிரஸ் எம்பி ஜோதிமணி டெல்லியில் போய் சண்டை போட்டுவிட்டு சட்டை கிழிந்து விட்டது என்று சொல்கிறார்.. சண்டைன்னா சட்டை கிழிய தான் செய்யும். மதுரை ஆதீனத்தை பற்றி தவறாக பேச ஆரம்பித்த அன்னைக்கே சேகர் பாபு கதை காலி... பழைய சேகர் பாபுவை பார்ப்பீர்கள் என்று மிரட்டுகிறார்... ஆதீனத்தை மட்டும் தொட்டுப் பாருங்களேன், இந்த மதுரை மக்களும், பாஜகவும், மோடியும் என்ன செய்வார்கள் என்று காட்டுவோம்.." என்று பேசினார்.

ஹைலைட்
ஆனால், அண்ணாமலை பேசியதைவிட, மேடையில் நடந்த சமாச்சாரங்கள்தான் ஹைலைட் ஆகிவிட்டது.. மாநில தலைவராக பதவியேற்றதில் இருந்து, அண்ணாமலைக்கு தமிழகத்தில் இப்படி ஒரு வரவேற்பு கிடைத்திருக்குமா என்று தெரியவில்லை.. அண்ணாமலை மேடையேறியதுமே, பாஜக நிர்வாகிகள் அவரை சூழ்ந்து கொண்டனர்.. ஆளுயர மாலைகளை ஒவ்வொருவராக கொண்டு வர ஆரம்பித்தனர்.. இன்னொரு பக்கம் சால்வைகளையும், டவல்களையும் எடுத்து அண்ணாமலைக்கு போர்த்த ஆரம்பித்தனர்.

காவி மாலை
இதற்கு நடுவில் ஒருவர் ஒரு கூடையை தூக்கி கொண்டு மேடைக்கு வந்தார்.. திடீரென அண்ணாமலை காலடியில் வைத்துவிட்டு, அந்த கூடையில் இருந்து பூக்களை வாரி வாரி அண்ணாமலை மீது வீசுகிறார்.. அந்த பூக்கள் அண்ணாமலையின் முகத்திலேயே பட்டு, மறுபடியும் அந்த கூடைக்குள்ளேயே விழுந்துவிட்டது.. இதற்கே திணறிவிட்டார் அண்ணாமலை.. பிறகு நான்கைந்து பேர் சேர்ந்து ஒரு காவி மாலையை கொண்டு வந்து அண்ணாமலை கழுத்தில் போட்டனர்.. அந்த எடையை அண்ணாமலையை தாங்கவே முடியவில்லை..

அட்டைக்கத்தி
இதற்கு நடுவில், கலச கும்பத்தை எடுத்துக் கொண்டு, அண்ணாமலை நோக்கி ஒருவர் வந்தார்.. அதற்கு எதிர்புறம் கத்தியுடன் ஒருவர் மேடையை நோக்கி வந்தார்.. கடைசியில் பார்த்தால் அது தங்கமுலாம் பூசப்பட்ட அட்டைக்கத்தி.. இல்லை, இல்லை "வாள்" போலும்.. அண்ணாமலை கையில் தருவதற்காக அவர் முயன்று கொண்டிருந்தார்.. ஆனால் அதற்குள் அண்ணாமலை பேசுவதற்காக மைக் அருகில் வந்து நின்றார்.. அப்போதும் நிர்வாகிகள் அவரை விடவில்லை.. மாலை, சார்வை, போட்டோக்கள் என அண்ணாமலையை மகிழ்வித்து கொண்டே இருந்தனர்.

அண்ணா.. விடுங்கண்ணா..
ஒருகட்டத்தில் அண்ணாமலையே பொறுமையிழந்து, "அண்ணா, என்னை பேச விடுங்கண்ணா.." என்று நிர்வாகிகளிடம் கேட்டுக் கொண்டிருந்த நேரம் திடீரென அந்த கூட்ட நெரிசலில் தடுமாறிவிட்டார்.. இப்படியே விட்டால், இந்த நாளே முடிவடைந்துவிடும் என்று நினைத்து, மைக் அருகில் வந்தார்.. பேச்சை ஆரம்பித்துவிட்டார் போல என்று நினைத்தால், விழா ஏற்பாட்டாளர் வேலையை அண்ணாமலை செய்ய ஆரம்பித்துவிட்டார்..

கூடை மாலை
"எல்லாரும் போய் உட்காருங்க.. மேடையில் இருக்கக்கூடிய சகோதர, சகோதரிகள், கொஞ்சம் சைடுல வாங்க.. அண்ணே கொஞ்சம் சைடுல வாங்க" என்று கூட்டத்தை ஒரு மாநில தலைவரே கட்டுப்படுத்தி அடக்கி கொண்டிருந்தார். அப்போதும், அவர் பேசுவதை காதில் வாங்காத, ஒருவர் மாலையை எடுத்து வந்து அண்ணாமலை கழுத்தில் போட்டுவிட்டுத்தான் அங்கிருந்து நகர்ந்தார்.. அதற்கு பிறகுதான் அண்ணாமலை பேச்சையே துவங்கினார்.. ஆனால், அண்ணாமலை தலையெல்லாம் பூக்கள் நிறைய சிதறிக்கிடந்தன.. அப்படியேதான் மேடயில் பேசி முடித்தார்..

டாக்டர் சரவணன்
இப்படி ஒரு அமர்க்களத்தை பார்த்து, மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் என்ன நினைத்திருப்பாரோ தெரியவில்லை.. ஆனாலும், இந்த களேபரத்துக்கு நடுவில் ஒருவர், மஞ்சள் சட்டையுடன் இங்குமங்குமாய் மேடையில் ஓடிக் கொண்டிருந்தார்.. யார் என்று பார்த்தால், அது டாக்டர் சரவணன்தான்.. இந்த பாஜக விழாவை, எதிர்பார்த்த மாதிரியே சீரும் சிறப்பா செய்து முடிச்சிட்டார்.. அப்ப எம்பி சீட் கன்பார்ம்டு போல?!