"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை!
மதுரை: "எங்க ஏரியாவுக்கு வா" என்ற சுந்தர் சி-யின் நகரம் திரைப்படத்தில் வந்த நகைச்சுவை காட்சியை சொல்லி வடிவேல் பேசிய வசனத்தை, மதுரை மத்திய தொகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.
மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி போட்டியிடுகிறார். அது போல் திருப்பரங்குன்றத்தில் ராஜன் செல்லப்பா, திருமங்கலத்தில் ஆர்.பி.உதயகுமார், மதுரை வடக்கு டாக்டர் சரவணன், மதுரை தெற்கு வேட்பாளர் ராம சீனிவாசன் ஆகியோரை ஆதரித்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் கூறுகையில், மாநகரத் தலைவர்கள் ஊழலுக்காக பதவியை ராஜினாமா செய்தனர். இப்படிப்பட்ட திமுக அரசு தேவையா? தவறு செய்த ஒவ்வொரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பது அதிமுக, ஏராளமான வாக்குறுதிகளை அரசு ஊழியர்களுக்காக கொடுத்துள்ளோம். வேலைக்கு வராத ஆசிரியர்களுக்கு முழு ஊதியமா? என கேட்டவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்.
மக்களுக்கான நல்ல திட்டங்களை கொடுத்தது அதிமுக அரசு. அதனால்தான் எங்களையும் கூட்டணியையும் அரசு ஊழியர்கள் தேர்ந்தெடுத்தார்கள். அதிமுக ஆட்சியில் கேட்டதையெல்லாம் மத்திய அரசு கொடுத்தது.
முதல்வர் ஸ்டாலின் வீர வசனம் பேசுகிறார். அவரின் நிலை பரிதாபமாக இருக்கிறது. அதை பார்க்கும் போது எனக்கு ஒரு திரைப்பட டயலாக்தான் நினைவுக்கு வருகிறது. அதுவும் சுந்தர் சி நடித்த படத்தின் டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.
அதில் வடிவேலு இருப்பார். அவர் சுந்தர் சி.யிடம் "என் ஏரியாவுக்கு வா" என்பார். அவரும் அந்த ஏரியாவுக்கு வந்ததும், "என் ஏரியாவுக்கே வந்துட்டியா", "என் தெருவுக்கு வா" என்பார். சுந்தர் சி,அவரது தெருவுக்குள் வந்ததை பார்த்துவிட்டு, "என் வீட்டிற்கு வா பார்ப்போம்" என்பார்.
சுந்தர் சி, வடிவேலுவின் வீட்டிற்கும் சென்றுவிடுவார். உடனே வடிவேல், ஏதோ தெரியாம வீரவசனம் பேசிவிட்டேன், என்னை விட்டுடுப்பா" என சுந்தர் சி காலில் விழுந்து அழுவார். அந்த காமெடி காட்சிதான் நினைவுக்கு வந்தது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இதை சொன்னதும் தொண்டர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர். இந்த காமெடி நகரம் படத்தில் இடம்பெற்றது. வடிவேல் சொன்னது போல் தேடி தேடி சுந்தர் சி அவர் இருக்கும் இடத்தை அடைய மாட்டார். யாரையோ தேடி சென்ற போது எதேச்சையாக வடிவேலுவை பார்த்துவிடுவார்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை சக்கரவர்த்தியாகத் திகழும் வடிவேலுவின் திரைப்பயணத்தில், 'ஸ்டைல் பாண்டி' கதாபாத்திரம் ஒரு மைல்கல். சுந்தர் சி இயக்கத்தில் 2010-ஆம் ஆண்டு வெளியான 'நகரம் மறுபக்கம்' திரைப்படத்தில், வடிவேலுவின் அதிரடியான அலப்பறைகளும், அவர் பேசும் நையாண்டி வசனங்களும் இன்றும் ரசிகர்களால் சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்தத் திரைப்படம் ஹாலிவுட்டின் புகழ்பெற்ற 'கார்லிட்டோஸ் வே' படத்தின் தழுவலாக இருந்தாலும், அதன் நகைச்சுவை பகுதிகள் முற்றிலும் தமிழ் மண்ணிற்கேற்றவாறு வடிவமைக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக, வடிவேலுவின் 'ஸ்டைல் பாண்டி' கதாபாத்திரம், ஒரு தாதாவைப் போல பந்தா செய்து கொண்டு, இறுதியில் அடிவாங்கும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பலையில் அதிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
சுந்தர் சி மற்றும் குஷ்பூ இணைந்து தயாரித்த இந்த ஆக்ஷன் காமெடி படத்தில், அனுயா பகவத் நாயகியாக நடித்திருந்தார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சுந்தர் சி இயக்குநராகத் திரும்பிய இப்படம், தமன் இசையில் பாடல்களுக்காகவும் கவனிக்கப்பட்டது. போஸ் வெங்கட், பொன்னம்பலம் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்திருந்தாலும், வடிவேலுவின் காமெடி ட்ராக் தனித்து நின்றது.
வடிவேலுவின் உதவியாளர்களாக வரும் கிரேன் மனோகர் மற்றும் ஹல்வா வாசு ஆகியோருடன் அவர் செய்யும் லூட்டிகள் காலத்தால் அழியாதவை. "நீ ஆம்பளையா இருந்தா என் ஏரியாவுக்கு வாடா" என்று சவால் விட்டுவிட்டு, பின் விளைவுகளைச் சந்திக்கும் அவரது உடல்மொழி, நகைச்சுவை உணர்வின் உச்சம் என்றுதான் சொல்ல வேண்டும்.
இப்படத்தில் வரும் 'ஸ்டைல் பாண்டி' கதாபாத்திரம் வெறும் சிரிப்புக்காக மட்டுமல்லாமல், கதையோட்டத்தோடு இணைந்து பயணிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. இன்றும் மீம்ஸ் கிரியேட்டர்களின் ஃபேவரைட் மெட்டீரியலாக இந்தத் திரைப்படத்தின் காட்சிகள் விளங்குகின்றன. வடிவேலுவின் எதார்த்தமான நடிப்பும், சுந்தர் சியின் விறுவிறுப்பான திரைக்கதையும் இப்படத்தை ஒரு கமர்ஷியல் வெற்றியாக மாற்றியது.












Click it and Unblock the Notifications