எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறுஉருவம் எடப்பாடி பழனிசாமி.. செங்கோட்டையனை அட்டாக் செய்த ஆர்பி உதயகுமார்
மதுரை: எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவம் எடப்பாடி பழனிசாமி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். துரோகிகளால் அதிமுகவை அசைக்க முடியாது என்று கூறியுள்ள ஆர்.பி.உதயகுமார், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை மீட்டெடுத்து காப்பாற்றியவர் என்றும் தெரிவித்துள்ளார். ஆர்.பி.உதயகுமார் இந்த வீடியோ செங்கோட்டையனுக்கு அளித்த பதிலடியாக பார்க்கப்படுகிறது.
அத்திக்கடவு - அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதற்கு செங்கோட்டையன் தரப்பில், எடப்பாடி பழனிசாமிக்கு நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா புகைப்படங்கள் இடம்பெறவில்லை. இதனால் விழாவில் பங்கேற்கவில்லை என்று விளக்கம் அளித்தார்.

இதனைத் தொடர்ந்து செங்கோட்டையனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் செங்கோட்டையனை சந்திக்க அவரது ஆதரவாளர்களும் குவிந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆர் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பெயரை உச்சரிக்கவே இல்லை.
என்னை சோதிக்காதீர்கள்.. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என்றும் பேசி இருந்தார். இதனால் செங்கோட்டையன் - எடப்பாடி பழனிசாமி இடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டு செங்கோட்டையனுக்கு மறைமுகமாக பதில் அளித்துள்ளார்.
அந்த வீடியோவில், ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் அதிமுகவை மீட்டெடுத்து, காப்பாற்றியவர் எடப்பாடி பழனிசமி. எம்ஜிஆர், ஜெயலலிதாவின் மறு உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக என்று சொன்னாலே சோதனையை சந்தித்த இயக்கம். எம்ஜிஆர் மறைவிற்குப் பிறகு சிதறிய தேங்காய்வாய் சிதறிய இயக்கம், ஜெயலலிதாவின் முயற்சியாலே அதிமுக நிமிர்ந்து நின்றது.
பின்னர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்பு எடப்பாடி பழனிசாமி சிறப்பாக இயக்கத்தை நடத்தினார். 4 ஆண்டுகள் 3 மாதம் முழு ஆட்சியை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள், துரோகிகள் எடுத்து வைக்கின்ற வாதங்கள் எதுவும் அதிமுக அசைத்துப் பார்க்க முடியாது. எதிரிகள் எடுத்து வைக்கின்ற வாதங்களால் அதிமுகவிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் செங்கோட்டையனின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஓபிஎஸ் விலகலுக்கு பின் அந்த இடத்திற்கு ஆர்.பி.உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இந்த விவகாரம் குறித்து ஜெயக்குமார் மட்டுமே கருத்து கூறிய நிலையில், ஆர்பி உதயகுமார் வீடியோ மூலம் பதிலடி கொடுத்திருப்பது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications