"ஐந்தே வருஷம்... ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலை வந்திடும் போலயே.." திமுக அமைச்சர் கலகல
மதுரை: மதுரையில் பெண்கள் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, பெண்கள் வளர்ச்சி குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பெண் கல்வி மற்றும் மகளிர் வளர்ச்சியை உறுதி செய்ய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெண்கள் இலவசமாகக் கல்வி கற்கவும் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ள.
எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், பெண்கள் கல்வி கற்பதை அனைத்து அரசுகளுக்கும் ஊக்குவித்து வருகிறது. இலவச மிதி வண்டி தொடங்கி லேப்டாப் வரை பெண் கல்வியை உறுதி செய்ய பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்துள்ளனர்.
சேலம்- உளுந்தூர்பேட்டை நெடுஞ்சாலையில் விரிவாக்க பணிகள்.. அன்புமணி முயற்சி வெற்றி.. கொண்டாடும் பாமக

அமைச்சர் மூர்த்தி
அதிலும், குறிப்பாகக் கடந்த காலங்களில் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் வகையில் தாலிக்குத் தங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இப்போது அந்தத் திட்டத்தில் சற்றே மாற்றம் கொண்டு வந்து, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளின் வங்கிக் கணக்குகளில் மாதம் 1000 ரூபாய் செலுத்தப்படும் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதுபோன்ற திட்டங்களுக்கு மிகப் பெரியளவில் ஆதரவு கிடைத்து வருகிறது. இதற்கிடையே மதுரையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமைச்சர் மூர்த்தி பெண்கள் முன்னேற்றத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

அரசு பள்ளிகள்
மதுரை ஒத்தக்கடையில் உள்ள அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 1.80 கோடி ரூபாய் மதிப்பில் 3 தளங்களில் 12 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்காக நடைபெற்ற பூமி பூஜை விழாவில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், தூய்மை பணியாளர்களுக்கு வாகனங்களையும் அமைச்சர் மூர்த்தி அளித்தார்.

சு.வெங்கடேசன்
இந்த நிகழ்ச்சியில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகையில் "சமூகத்தின் மிகப்பெரிய சொத்து அரசுப் பள்ளிகளும் இந்த அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்களும் தான். மதுரை மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற 2 மாணவிகள் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று அர்ஜுனா விருது பெறும் அளவிற்கு உயர்ந்து உள்ளனர்.. 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை நிறுத்தும் வகையில் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் இந்த செயல்பாடு அதிர்ச்சி அளிக்கிறது.. கல்வித் தொகையை நிறுத்த கூடாது என ஒன்றிய கல்வி அமைச்சருக்குக் கடிதம் எழுதி உள்ளேன்" எனப் பேசினார்.

ஆண்களுக்கு இட ஒதுக்கீடு
அதைத் தொடர்ந்து விழாவில் பேசிய வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, "அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்க வேண்டும் எனப் பள்ளிகளில் வசதிகள் செய்து தரப்படுகிறது.. அரசுப் பள்ளி மாணவிகள் தகுதியும், திறமையும் வாய்ந்தவர்களாக உள்ளனர்,.. திறமை இருந்தால் நிச்சயம் உயர்வு இருக்கும்.. மதுரையைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவிகள் சர்வதேச அளவில் சாதனை செய்து உள்ளதே இதற்குச் சாட்சி.. 5 ஆண்டுகளில் ஆண்களுக்கு இட ஒதுக்கீடு கேட்கும் நிலைமை வரும்.. அந்த அளவிற்குப் பெண்கள் எல்லா துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள்" என்று அவர் தெரிவித்தார்.

சேமிப்பு
முன்னதாக கடந்த ஆண்டு திமுக ஆட்சியைப் பிடித்ததும் அரசு மாநகராட்சி பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. மகளிர் மத்தியில் இத்திட்டத்திற்கு மிகப் பெரியளவில் ஆதரவு கிடைத்தது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் ஒவ்வொரு மாதமும் இத்திட்டத்தால் பெண்களுக்கு சுமார் 888 ரூபாய் சேமிக்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது. இதை நிதித்துறை அமைச்சர் பிடிஆர் உள்ளிட்ட பலரும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.