Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டிஎன்பிஎஸ்சி தேர்வு.. போலிச்சான்றால் ஏழைகளின் அரசு வேலை கனவு புதைக்கப்படுகிறது.. ஹைகோர்ட் கண்டனம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: 2019-ம் ஆண்டில் நடந்த குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்ததாககூறி போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணி நியமனம் பெற்றவர்களுக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த விவகாரத்தில் விசாரணை வளையத்தில் தமிழகத்தின் முக்கிய பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்நிலையில் போலிச்சான்று மூலம் வேலை பெறுவோரால் ஏழைகளின் கனவுகள் புதைக்கப்படுகின்றன என்று மதுரை ஐகோர்ட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், திருமங்கலத்தை சேர்ந்த சக்திராவ் என்வர் கடந்த 2021-ம் ஆண்டு டிஎன்பிஎஸ்சி தேர்வில் போலி சான்றிதழ் தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவினை ஏற்ற உயர்நீதிமன்றம். 2019-ம் ஆண்டில் நடந்த குரூப்-1 தேர்வில் தமிழ்வழியில் படித்ததாககூறி போலி சான்றிதழ் சமர்ப்பித்து பணி நியமனம் பெற்றவர்கள் மீதான புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இதுவரை எந்த விசாரணையும் முறையாக நடக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சக்திராவ் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்.

jobs tnpsc group 1

இந்த வழக்கில் பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் பிறப்பித்தனர். அதன்பிறகே குரூப்-1 அதிகாரிகளாக பணியாற்றும் சப்-கலெக்டர், வணிகவரித்துறை அதிகாரி உள்ளிட்ட 4 அதிகாரிகள் மற்றும் காமராஜர் பல்கலைக்கழக பணியாளர்கள் உள்பட 9 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது: "கடந்த 2019-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் மொத்தம் 34 பேர் தமிழ்வழியில் படித்ததாக சான்றிதழ் சமர்ப்பித்து பணி ஆணை பெற்றதுடன் பணியில் சேர்ந்துள்ளனர். இவர்களில் சிலர் தமிழ்வழியில் படித்து முறையாக தேர்வு எழுதி பணி நியமனம் பெற்றவர்கள் ஆவார். அவர்களை தவிர, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்ததாக தமிழ்வழிச்சான்றிதழ்களை 5 பேர் சமர்ப்பித்திருக்கிறார்கள். அவர்களில் 4 பேர் போலி சான்றிதழ்களை பெற்றிருக்கிறார்கள். இவர்கள் மீது வழக்கு பதிந்து விசாரணை நிலுவையில் இருக்கிறது.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தொலைதூர கல்வியில் படித்த 2 பேர், சென்னை பல்கலைக்கழகத்தில் படித்த 3 பேர் ஆகியோரின் படிப்பு மற்றும் தமிழ்வழிச் சான்றிதழ்களில் எந்த சர்ச்சையும் எழவில்லை. அதேநேரம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வியில் பி.ஏ. படித்த ஒருவர், அங்கு தமிழ்வழி சான்றிதழை பெறவில்லை. அந்த சான்றிதழ் சமர்ப்பிக்காமலேயே தமிழ்வழி இடஒதுக்கீட்டில் பணி நியமனம் பெற்றிருக்கிறார். மீதமுள்ள 16 பேர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்து பெற்ற தமிழ்வழிச்சான்றிதழ்களை சமர்ப்பித்திருக்கிறார்கள். இவர்களில் 3 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டு, விசாரணை நடத்தி வருகிறோம்" இவ்வாறு மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறினார்கள்.

மதுரை லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிக்கையை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், முக்கியமான உத்தரவினை பிறப்பித்தார்கள்.அந்த உத்தரவில் அவர் கூறுகையில், நம்முடைய நாட்டில் பல லட்சம் ஏழை இளைஞர்கள் குரூப்-1 உள்ளிட்ட அரசின் பல்வேறு வேலைவாய்ப்பை பெற நள்ளிரவிலும் விளக்கு வைத்து கடுமையாக படிக்கின்றனர். அப்படி இருக்கும்போது, போலிச் சான்றிதழ் மூலம் வேலைவாய்ப்பைப் பெறுவது போன்ற பாதக செயல்களால், ஏழை மாணவர்களின் கனவுகள் புதைக்கப்படுகிறது. இந்த விவகாரத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, 2021-ம் ஆண்டில் இந்த உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. ஆனாலும் இந்த விஷயத்தை கிடப்பில் போட்டுவிட்டார்கள்.

இப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் படித்த 4 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்திருக்கிறார்கள். இந்த நடவடிக்கைக்கு மட்டுமே லஞ்ச ஒழிப்பு போலீசார் 3 ஆண்டுகளை எடுத்திருக்கிறார்கள். முந்தைய உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் தற்போது மற்ற பல்கலைக்கழகங்கள் மீதான விசாரணையை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரப்படுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இந்த வழக்கில் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பதிவாளர், அனைத்து விவரங்களையும் சமர்ப்பித்து போலீசார் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். விசாரணையை முடிக்க போலீசாருக்கு மேலும் 2 மாதம் அவகாசம் வழங்குகிறோம்" இவ்வாறு கூறிய நீதிபதிகள் , இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 2025 ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+