சிவகங்கை வாலிபருக்கு பேஸ்புக்கில் அறிமுகம் ஆன இன்ஸ்பெக்டர் தோழி.. கடைசியில் ட்விஸ்ட்! 4 லட்சம் அபேஸ்
மதுரை: சிவகங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பெண் ஒருவர் நான்கரை லட்சம் மோசடி செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த முத்துலட்சுமி என்ற பெண், தான் இன்ஸ்பெக்டராக வேலை செய்து வருகிறேன் என்றும், உயர் அதிகாரிகளை தெரியும் என்று கூறி இளைஞரிடம் பணத்தை கறந்துள்ளார். இது தொடர்பாக கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வரும் இளைஞர்களை குறிவைத்து சிலர் பணம் பறிக்கும் மோசடிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். உயர் பொறுப்பில் இருக்கிறேன்.. உயர் அதிகாரிகளை தெரியும், கொஞ்சம் பணம் கொடுத்தால் போதும் அரசு வேலை உங்கள் கைகளில் என பொய் சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி இருக்கிறது.

சிவகங்கை இளைஞர்
இது போன்ற மோசடிகளில் யாரும் சிக்கிவிடக்கூடாது என போலீசார் அடிக்கடி அறிவுறுத்தி வந்தாலும் சில ஏமாந்துவிடுகிறார்கள். அந்த வகையில் தான் சிவகங்கை இளைஞர் ஒருவர் ஏமாந்துள்ளார். இது குறித்து விவரங்களை காணலாம்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே வசித்து வருபவர் ரமேஷ் குமார் (வயது 32). என்ஜினியரிங் படித்துள்ள ரமேஷ் குமார் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என படித்து வந்துள்ளார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பேஸ்புக்கில் ரமேஷ் குமார் பதிவிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
பேஸ்புக்கில் அறிமுகம் ஆன முத்துலட்சுமி
இதில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே வசித்து வரும் வெங்கட்ராமன் என்பவரின் மனைவி முத்துலட்சுமி (39) என்பவர் பேஸ்புக் மூலமாக அறிமுகம் கிடைத்தது. பேஸ்புக்கில் இன்ஸ்பெக்டர் போல் தன்னை அறிமுகம் செய்து கொண்ட முத்துலட்சுமி ரமேஷ் குமாரிடமும் அரசு வேலை குறித்து பேசி வந்துள்ளார். மேலும் தான் எப்படி இன்ஸ்பெக்டர் ஆனேன் என்பது உள்ளிட்ட தகவல்களையும் கூறியதாக சொல்லப்படுகிறது.
இதனை எல்லாம் நம்பிய ரமேஷ் குமார் தொடர்ந்து அவரிடம் பேசி வந்துள்ளார். அப்போது அவர் தனக்கு உயர் பொறுப்பில் உள்ள அரசு அதிகாரிகள் பலர் தெரியும் என்றும், நீ அரசு வேலைக்கு படித்து வருகிறாய்.. வேண்டும் என்றால் சொல்லு.. உனக்கும் ஒரு அரசு வேலை வாங்கி தருகிறேன் என பேச்சுவாக்கில் அடித்து விட்டுள்ளார்.
உயர் அதிகாரிகளை தெரியும்
ஆனால் கொஞ்சம் பணம் செலவு செய்ய வேண்டும். பணம் கொடுத்தால் போதும் எனக்கு தெரிந்த உயர் அதிகாரிகளை வைத்து அரசு வேலை வாங்கி தருகிறேன் என ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை நம்பி ஏமாந்துபோன அவர் ஆன்லைன் மூலமாகவும், ரொக்கமாகவும் பணத்தை கொடுத்து வந்துள்ளார். இப்படியாக மொத்தம் நான்கரை லட்சம் கொடுத்து இருக்கிறார்.
ஆனால் அரசு வேலைக்கு ஏற்பாடு செய்வது போல ஏமாற்றிக்கொண்டே வந்து இருக்கிறார் முத்துலட்சுமி. இதனால் சந்தேகமடைந்து விசாரித்த போதுதான் அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. முத்துலட்சுமி இன்ஸ்பெக்டரே கிடையாதாம். போலியாக இன்ஸ்பெக்டர் என்று கூறி வந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் பணத்தை திருப்பி கேட்டுள்ளார்.
கைது செய்த போலீசார்
ஆனால் அவர் கொலை மிரட்டல் விடுத்ததால் என்ன செய்வதென்று தெரியாமல் போலீசில் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் இன்ஸ்பெக்டர் என்று கூறி ஏமாற்றி, அரசு வேலை வாங்கி தருவதாக பணம் பறித்த முத்துலட்சுமியை அதிரடியாக கைது செய்தனர். மேலும் இளைஞர்கள் இது போல் அரசு வேலைக்காக யாரிடமும் பணம் கொடுத்து ஏமாறக் கூடாது என்றும் அட்வைஸ் செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications