மதுரை அருகே காலையிலேயே பரபரப்பு.. சின்ன உடைப்பு கிராமத்தில் குவிந்த 1000க்கும் மேற்பட்ட போலீசார்!
மதுரை: மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் காலையிலேயே 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. மதுரை விமான நிலைய விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக சின்ன உடைப்பு பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் சென்னை, கோவைக்கு அடுத்து அதிக பயணிகளை கையாளும் விமான நிலையமாக மதுரை விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் மதுரை விமான நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூர், ஹைதராபாத், டெல்லி, மும்பை போன்ற நகரங்களுக்கும், சிங்கப்பூர், துபாய், இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் மதுரையில் இருந்து விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்காக முடிவு செய்யப்பட்டது. அதன்படி விமான நிலையத்தின் விரிவாக்க பணிகளுக்காக 633.17 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு அதனை கையகப்படுத்துவதற்காக சின்ன உடைப்பு கிராமத்திற்கு அதிகாரிகள் வருகை தந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தங்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். அவ்வாறு செய்யாமல் நிலம் கையகப்படுத்துவதை அனுமதிக்க மாட்டோம் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சின்ன உடைப்பு கிராமத்தில் உள்ள வீடு மற்றும் நிலங்களைக் கையகப்படுத்துவதற்காக தெற்கு தாசில்தார் விஜயலட்சுமி, மதுரை விமான நிலைய நில எடுப்பு தாசில்தார் பிரபாகரன், ஆகியோர் ஜேசிபி வாகனங்களுடன் கிராமத்திற்கு வருகை தந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குவிந்த சின்ன உடைப்பு கிராம மக்கள், எங்களுக்கு மூன்று சென்ட் இடம் வழங்க வேண்டும். அந்தப் பகுதியில் பள்ளிக்கூடம், சுடுகாடு கோயில் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஏற்கனவே நிலம் விரிவாக்கம் தொடர்பாக அறிவித்தவுடன் இழப்பீடுத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், இது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசி முடிவெடுக்க இருப்பதாகவும் தாசில்தாரும் காவல் அதிகாரிகளும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி முன்னிலையில் சின்ன உடைப்பு கிராம மக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், கிராம மக்கள் நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சின்ன உடைப்பு பகுதியில் பரபரப்பு நிலவியது.
இந்நிலையில், இன்று காலையிலேயே, சின்ன உடைப்பு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று நிலம் கையகப்படுத்தும் பணிகளை அதிகாரிகள் மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. வஜ்ரா வாகனங்கள், ஆம்புலன்ஸ்களும் அதிகளவில் இருப்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications