அங்கித் திவாரிக்கு ‘செக்’.. சூடாக வாதங்களை முன்வைத்த தமிழக அரசு.. ஐகோர்ட் எடுத்த அதிரடி முடிவு!
மதுரை: அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து உயர்நீதிமன்ற கிளை முடிவுசெய்யும் என்று நீதிபதி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனை துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபுவிடம், வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக கூறி ரூ.40 லட்சம் லஞ்சம் வாங்கியதாக மதுரை அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை கடந்த டிசம்பர் 1ஆம் தேதி திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

அமலாக்கத்துறை அதிகாரி, லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, அமலாக்கத்துறையின் மதுரை அலுவலகத்திற்குள் சென்று தமிழக அரசின் லஞ்ச ஒழிப்புத் துறையினர் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர். அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியிடம் விசாரணை நடத்திய பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி இரண்டு முறை திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த நிலையில் 2 முறையும் தள்ளுபடியானது. உயர் நீதிமன்ற மதுரை கிளையும் அங்கித் திவாரியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி அங்கித் திவாரி மனு தாக்கல் செய்தார்.
அங்கித் திவாரி தனது மனுவில், "நான் கைது செய்யப்பட்டு 70 நாட்களுக்கு மேலாக சிறையில் உள்ளேன். என்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தது சட்டவிரோதமானது. என் மீது பொய்யாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. என் மீதான வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" எனக் கோரியுள்ளார்.
இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அங்கித் திவாரி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மனுதாரர் கிட்டத்தட்ட 80 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கிறார். உடனடியாக அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிட்டார்.
ஆனால் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்க கூடாது என கடுமையான வாதங்களை முன்வைத்தார்.
உச்சநீதிமன்றம் இந்த வழக்கிற்கு இடைக்கால தடை மட்டுமே விதித்துள்ளது. வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் வரும் மார்ச் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. திண்டுக்கல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் குற்றப்பத்திரிக்கை தயார் செய்து வைத்துள்ளனர். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். அதுவரை அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது.
அங்கித் திவாரிக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க வாய்ப்புள்ளது என கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதுரை உயர்நீதிமன்ற கிளை மார்ச் 12ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்திவைத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை பொறுத்து தீர்ப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு வரும் மார்ச் 11ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. அந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவைப் பொறுத்து, ஜாமீன் மனுவில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


Click it and Unblock the Notifications
