2 இந்துக்களுக்கு இடையே மட்டுமே சுயமரியாதை திருமணம் செல்லும்.. ஐகோர்ட் கிளை பரபரப்பு தீர்ப்பு!
மதுரை : பட்டியலினத்தைச் சேர்ந்த இளைஞர், கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கை, உயர்நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்தது.
சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்கள், இரு இந்துக்களுக்கு இடையே மட்டுமே பதிவு செய்ய முடியும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
திருமண பதிவிற்காக உரிய படிவத்தில் நோட்டீஸ் அளிக்க வேண்டும், அப்படி நோட்டீஸ் வந்ததன் மூலம் தான், 72 வயது பெரியார், 27 வயது மணியம்மை ஆகியோரின் திருமணம் பற்றிய விபரம் தெரியவந்தது என நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
முஸ்லீம் பெண்கள் 16 வயதில் திருமணம் செய்யலாம்.. சட்டப்படி சரி! பஞ்சாப் ஐகோர்ட் முக்கிய தீர்ப்பு

இந்து தலித் ஆண் - கிறிஸ்தவ பெண் திருமணம்
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே விடத்தகுளம் புதூர் பகுதியைச் சேர்ந்த சரத்குமார், இந்து பட்டியலினத்தைச் சேர்ந்தவர். இவர் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்த லெடியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். தங்கள் திருமணத்தை சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யக் கோரி, திருச்சுழி சார் பதிவாளரிடம் சரத்குமார் லெடியா தம்பதியர் மனு அளித்தனர். லெடியாவிற்கு 21 வயது பூர்த்தியாகவில்லை எனக் கூறி சார் பதிவாளர் அதனை நிராகரித்தார். அதை எதிர்த்து, உயர்நீதிமன்ற மதுரை கிளையில் சரத்குமார் மனு செய்தார்.

நீதிபதி உத்தரவு
உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்தார். மனுதாரர் தரப்பில், பெண் 18 வயதை பூர்த்தி செய்திருந்தால் போதுமானது. திருமணத்தை பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி இந்த திருமணம் இந்து திருமணச் சட்டப்படியும், கிறிஸ்தவ திருமண சட்டப்படியும் செல்லாது எனக் கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.

பெரியார் - மணியம்மை திருமணம்
நீதிபதி பிறப்பித்த உத்தரவில், திருமண பதிவிற்காக உரிய படிவத்தில் நோட்டீஸ் அளிக்க வேண்டும் என சிறப்பு திருமணச் சட்டப் பிரிவு தெரிவிக்கிறது. அதை திருமண பதிவு அதிகாரி அறிவிப்பு பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். அந்த பதிவேடு அனைவரும் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். அப்படி நோட்டீஸ் வந்ததன் மூலம் தான், 72 வயது பெரியார் ஈ.வெ.ராமசாமி, 27 வயது மணியம்மை ஆகியோரின் திருமணம் பற்றிய விபரம் தெரியவந்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோனின் மனைவி அவரை விட, 25 வயது மூத்தவர். அத்தகைய உதாரண தம்பதியருக்கு, வயது என்பது வெறும் எண் தான். வயது வெறும் எண் தானா என்றால், எப்போதும் அப்படி இல்லை.

சுயமரியாதை திருமணம்
இந்த வழக்கில் மனுதாரர் இந்து. லெடியா கிறிஸ்தவர். அவர்கள் வெளிப்படையாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர். சுயமரியாதை மற்றும் சீர்திருத்த திருமணங்கள், இரு இந்துக்களுக்கு இடையே மட்டுமே பதிவு செய்ய முடியும். மனுதாரர் சரத் குமார் மற்றும் லெடியா இடையே நடந்த திருமணத்தை, இந்து திருமணச் சட்டத்தின் கீழ் நடந்ததாக கருத முடியாது.

கிறிஸ்தவ திருமணச் சட்டம்
இந்திய கிறிஸ்தவர்கள் திருமணச் சட்டத்தில் மணமக்கள் இருவரும் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டும் எனச் சொல்லப்படவில்லை. அதேநேரம், அந்த திருமணம் தேவாலயத்தில் காலை 6 மணி முதல் 7 மணிக்குள் நடைபெற வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. மனுதாரரின் திருமணம் அவ்வாறு நடைபெறவில்லை. இதனால் இந்தச் சட்டத்தின் கீழும் அவரது திருமணத்தைப் பதிவு செய்ய முடியாது.

சிறப்பு திருமணச் சட்டம்
சிறப்பு திருமணச் சட்டப்படியும் மனுதாரர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அதில் திருமணப் பதிவுக்கு 30 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்க வேண்டும். மனுதாரர் திருமணம் முடிந்த பிறகே நோட்டீஸ் அளித்துள்ளார். மனுதாரரின் கோரிக்கையை சார் பதிவாளர் நிராகரித்தது சரியே. மனுதாரர் சட்டத்தின் நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார்.