காத்திருந்த இந்திராணி.. பிளைட்டில் பறந்து வந்த பிடிஆர்.. மதுரை மேயருக்கு வாழ்த்து.. வெடித்தது பூசல்
பிடிஆர் பழனிவேல், மதுரை மேயர் இந்திராணிக்கு வாழ்த்து கூறினார்
மதுரை: மதுரை மேயராக இந்திராணி, பொறுப்பேற்று கொண்டார்.. அவருக்கு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன் செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
மதுரை மாநகர மேயர் பதவியை குறிவைத்து, கடந்த சில தினங்களாகவே, ஏராளமான திமுக பிரமுகர்கள் காய்நகர்த்தி வந்தனர்.. இதில், இறுதியில் இந்திராணி என்பவர் பெயர் அறிவிக்கப்பட்டது.. இந்த பெயரை அறிவித்ததுமே ஏராளமான அதிருப்திகள் கட்சிக்குள் வெடித்தன.
ஆரப்பாளையம் பகுதி திமுக செயலாளராக பொன்.வசந்த் என்பவர் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளர் ஆவார்.. 57-வது வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தன்னுடைய மனைவி இந்திராணியை நிறுத்தினார்... இவர் பட்டப்படிப்பு முடித்துள்ளார்..

பிடிஆர் சிபாரிசு
மிசா பாண்டியன் மனைவி பாண்டிச்செல்வி, முருகன் மனைவி பாமா ஆகியோரும் பிடிஆர் எப்படியும் தங்களைத்தான் மேயர் பதவிக்கு சிபாரிசு செய்வார் என்று நம்பி இருந்தனர்.. காரணம், இவர்களும் பிடிஆரின் ஆதரவாளர்கள்தான்.. ஆனால், இந்திராணியை பிடிஆர் தரப்பின் சிபாரிசின் பேரில் தலைமை அறிவித்தது.. இதற்கு நடுவில் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம், தன்னுடைய மருமகள் விஜயமௌசுமிக்காக எவ்வளவோ முயன்று பார்த்தார்..

இந்திராணி
அதேபோல, அமைச்சர் பி.மூர்த்தி வாசுகிக்காக முயன்று பார்த்தார், யாருக்குமே வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்திராணிக்கு பெயரே இறுதியாக அறிவிக்கப்பட்டது. இதற்கு காரணம், மதுரை மாவட்ட திமுகவில் கட்சி பொறுப்பிலும், மக்கள் பிரதிநிதியாகவும் முக்குலத்தோரில் ஒரு உட்பிரிவான பிரமலைக்கள்ளர் சமூகத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததாலும்தான், இந்த வாய்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்பட்டதுஎன்றாலும், கட்சிக்குள் அதிருப்திகள் காணப்படுகின்றன..

15 கவுன்சிலர்கள்
இந்நிலையில், அதிமுக வெறும் 15 கவுன்சிலர்களை மட்டுமே பெற்றிருந்ததால் அவர்கள் இன்று காலை 9.30 மணிக்கு கடந்த மறைமுக மேயர் தேர்தலில் பங்கேற்கவில்லை. திமுக மேயர் வேட்பாளர் இந்திராணி பொன்வசந்த் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால், அவர் போட்டியின்றி மதுரை மாநகராட்சியின் 8-வது மேயரானார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகவே சென்னையில் இருந்த பிடிஆர், தனி விமானத்தில் பறந்துவந்து கலந்து கொண்டார்...

தனிவிமானம்
பிடிஆர் சென்னையில் இருந்ததால் அவர் விழாவுக்கு வந்து சேரும்வரை, இந்திராணி பொன்வசந்த் மநகராட்சியில் 2 மணி நேரமாக காத்து கொண்டிருந்தார்.. தனி விமானத்தில் பிடிஆர் சென்னையில் இருந்து மதுரைக்கு புறப்பட்டு 11.30 மணியளவில் வந்தபிறகே, இந்திராணி பொன்வசந்த் மேயராக அதற்கான அங்கியில் வந்து பதவியேற்றார். மாநகராட்சி ஆணையாளர் கேபி.கார்த்திகேயன் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

கோஷ்டி மோதல்
புதிய மேயராக பொறுப்பேற்ற இந்திராணி பொன் வசந்த்திற்கு பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் செங்கோல் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்... மதுரை எம்பி சு.வெங்கடேசன், மதிமுக எம்எல்ஏ பூமிநாதன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் பொன்னாடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஆனால், முக்கிய நிர்வாகிகளான, அமைச்சர் பி.மூர்த்தி, மாநகர, புறநகர் மாவட்டச் செயலாளர்கள் யாருமே இந்த விழாவில் பங்கேற்கவில்லை.. நிகழ்ச்சியை புறக்கணித்துவிட்டனர்.. மதுரை மாவட்ட திமுகவில் ஏற்பட்டுள்ள கோஷ்டி பூசலை இந்த புறக்கணிப்பு சம்பவம் வெளிக்காட்டுவதாகவே அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications