ஸ்ட்ரெஸ்ல வேலை பார்க்கும் போலீஸ்காரர்களை பாதுகாப்பது நமது கடமை.. ஐகோர்ட் மதுரை கிளை
மதுரை: சட்டப்படி நேர்மையாக செயல்படும் காவல்துறையினரை மிரட்டும் நபர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என, உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது.
மேலும் மன அழுத்தத்துடன் செயல்படும் காவலர்களை பாதுகாக்கும் கடமை நீதிமன்றம், உயரதிகாரிகள், மக்கள் என அனைத்து தரப்பினருக்கும் உள்ளது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

சிவகங்கை போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ரகு, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் இன்று விசாரித்தார்.
வழக்குப்பதிவு செய்ததில் விதிமீறல் இருந்தால் மட்டுமே காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட முடியும் என்றும், தவறான நோக்கத்தில் வழக்கு தொடருவதை நீதிமன்றம் சகித்து கொள்ள கூடாது என்றுகூறினார்.
மேலும் கருத்து கூறிய அவர் சட்டத்தை மதித்து நேர்மையான முறையில் வேலை செய்யும் போலீஸ்காரர்களை ஊக்கப்படுத்தும் அதே நேரத்தில் காவல்துறையில் ஊழல் செய்பவர்கள் மீது தயங்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடமையை சரியாக செய்யும் அதிகாரிகளை மிரட்டும் போக்கு மிகவும் அதிகரித்து காணப்படுகிறது.
கடமையை சரியாக செய்யும் காவலர்களை மறைமுகமாக மிரட்டும் வகையில் பல வழக்குகள் தொடரப்படுகின்றன. வழக்கில் தொடர்புடையவர்களும், அவர்களின் உறவினர்களும் காவல் அதிகாரிகளை மிரட்டும் போக்கில் ஈடுபடுகின்றனர் என்று நீதிபதி சுப்ரமணியன் குறிப்பிட்டார்.
போலீஸார் மீதே பொய்வழக்கு தொடருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார் நீதிபதி. பின்னர் மனுதாரர் தன் மீதான வழக்கை சட்டப்படி சந்திக்க வேண்டும் என்று கூறி, இன்ஸ்பெக்டர் பொன்ரகு, சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications