பாஜக கூட்டணியில் சேருங்க.. சேருங்க.. நடிகர் விஜய்க்கு இடைவிடாமல் அழைப்பு- என்ன முடிவு எடுப்பார்?
மதுரை: திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் உறுதியாக இருந்தால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையலாம் என அக்கட்சி மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது.
மதுரையில் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் வரலாற்றில் முதலாது ஓபிசி பிரதமர் நரேந்திர மோடிதான். அனைத்து மக்களின் நலனுக்காகப் பணியாற்றுகிறவர்.

தற்போதைய சூழ்நிலையில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவை. இதனை உணர்ந்துதான் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு தொடங்கும்.
திராவிடர் இயக்கத்தின் நீதிக்கட்சி ஆட்சியில்தான் சீர்மரபினர் ஜாதியினரை குற்றப்பரம்பரையினராக முத்திரை குத்தும் நடைமுறை தொடங்கியது. ஆனால் அந்த நீதிக் கட்சியில் இருந்து தொடங்கப்பட்ட திமுகதான் இன்றைக்கு சமூக நீதியைப் பற்றி பேசுகிறது. அன்று காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் ஆட்சியில் ஏன் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்தவில்லை?
மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு தொடங்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளில் நிறைவடையும் என விளக்கம் அளித்துள்ளார். காங்கிரஸ் கட்சி ஆளும் தெலுங்கானாவில் ஜாதிவாரி சர்வே நடத்தப்பட்டது; அது கண்மூடித்தனமானது. அது வெளிப்படைத்தன்மையே இல்லாதது. ஆனால் மத்திய அரசு நடத்தும் ஜாதிவாரி மக்கள் தொகை வெளிப்படைத்தன்மையாகவே இருக்கும். ஒவ்வொருவரையும் அடையாளப்படுத்தும் துல்லியமான கணக்கெடுப்பாகவே இருக்கும்.
காங்கிரஸ் கட்சிக்கு திடீரென ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் சமூக நீதி மீது அக்கறை வந்துள்ளது ஆச்சரியமாக இருக்கிறது. ரூ.5,000 கோடி ஒதுக்கீடு செய்து காங்கிரஸ் ஆட்சியில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு என்னதான் ஆனது? என மக்களுக்கு நன்றாகவே தெரியும். முறையாக சமூக நீதியை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் மத்திய அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடைபெற உள்ளது.
ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை விசிக தலைவர் திருமாவளவன் ஆதரிக்கிறாரா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தலித் மக்களுக்காக குரல் கொடுக்கும் திருமாவளவன், கண்மூடித்தனமாக எதுவும் பேசாமல் வெளிப்படையாக தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்யுடன், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, பேச்சுவார்த்தை நடத்துகிறதா? என்பது எனக்கு தெரியாது. திமுகவை வீழ்த்துவதில் நடிகர் விஜய் உறுதியாக இருந்தால் பாஜக கூட்டணியில் அவர் இணையலாம்; அவரை நாங்கள் வரவேற்கிறோம்.
நடிகர் விஜய் கட்சியில் குழந்தைகள் அணிதான் உள்ளது. பொதுவாக ஒரு நடிகருக்கு கூடுகிற கூட்டம், ரசிகர்கள் கூட்டம் என்பது வேறு. அரசியல் வேறு. நடிகர் விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்பதால் இதை புரிந்து கொள்ள முடியாது; பின்னாளில் புரிந்து கொள்வார். ஏனெனில் நடிகர் கமல்ஹாசனுக்கு கூட்டம் கூடவில்லையா? 1984-ல் எம்ஜிஆரை விட கருணாநிதிக்குதான் அதிக கூட்டம் கூடியது; ஆனால் கருணாநிதி தோற்றுதான் போனார். ஆகையால் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற சிந்தனையில் இருப்பவர்கள் அனைவரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய வேண்டும். இவ்வாறு ராம ஶ்ரீனிவாசன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications