மதுரை சித்திரை திருவிழா.. மீனாட்சி பட்டாபிஷேகம் நாளில் லோக்சபா தேர்தல்.. சும்மாவே அனலடிக்குமே
மதுரை: சித்திரை திருவிழா மதுரையில் உச்சத்தில் இருக்கும் நாளில் லோக்சபா தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் நடைபெறும் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் நடந்த நாளில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டதால் தேர்தல் ஆணையம் கடும் கண்டனத்திற்கு ஆளானது. இந்த முறை தேர்தல் தேதியை பட்டாபிஷேகம் நாளில் அறிவித்திருக்கிறார்கள்.
மதுரையில் சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. முக்கிய நிகழ்வான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 19 ஆம் தேதி பட்டாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று முதல் மதுரையில் மீனாட்சி அம்மன் ஆட்சி நடைபெற உள்ளது. 20 ஆம் திக் விஜயமும், ஏப்ரல் 21 ஆம் தேதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணமும் நடைபெறும். மாசி வீதிகளில் ஏப்ரல் 22 ஆம் தேதி திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ள நேரத்தில் மதுரையில் சித்திரை திருவிழாவும் களை கட்ட ஆரம்பித்து விடும். லட்சக்கணக்கான மக்கள் சித்திரை திருவிழாவிற்காக மதுரையில் கூடுவார்கள். தினம் தினம் சாமி ஊர்வலம் வருவதால் தரிசனத்திற்காக மக்கள் வீதிகளில் குவிந்திருப்பார்கள். ஏப்ரல் 19ஆம்தேதியன்று மீனாட்சி பாட்டாபிஷேகம் நாளில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
2019ஆம் ஆண்டில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான தேரோட்டமும் கள்ளழகர் எதிர்சேவையும் நடைபெறும் நாளில் லோக்சபா தேர்தல் வாக்குப் பதிவு தேதி அறிவிக்கப்பட்டது தென் மாவட்ட மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்தும், உயர்நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தும் கூட தேர்தல் தேதி மாற்றப்படவில்லை. வாக்காளர்கள் பற்றியும் சிந்திக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி, கடமைக்காக தேர்தலை நடத்த நினைத்தால் நடத்துங்கள் என்று உயர்நீதிமன்றமும் கண்டனங்களை பதிவு செய்தது.
அதனால் சித்திரைத் திருவிழா பக்தர்கள், வாக்காளர்கள் என இரு தரப்பினருமே சிரமங்களைச் சந்தித்தனர். மேலும் 2014ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலைக் காட்டிலும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்தும் 2019ஆம் ஆண்டில் வாக்குப்பதிவு சரிந்தது. கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலில் மதுரை தொகுதியில் 67.87 சதவிகித வாக்குகள் பதிவாகின. ஆனால் 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது 65.83 சதவிகித வாக்குகள்தான் பதிவானது. வாக்குப் பதிவில் சுமார் 2 சதவிகிதம் சரிந்தது. தேர்தல் ஆணையம் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப் பதிவு செய்ய வாய்ப்பு வழங்கியும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் வாக்குப்பதிவு குறைந்தது.
இந்த ஆண்டுக்கான சித்திரைத் திருவிழா ஏப்ரல் 12ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் திருவிழா நாட்களில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறாமல் இருக்க தமிழக அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஏப்ரல் 19ஆம் தேதியன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா ஒருபக்கம் நடைபெற தேர்தல் திருவிழா மற்றொரு பக்கம் மதுரையில் அக்னி நட்சத்திரம் போல இப்போதே அனலடிக்க ஆரம்பித்து விட்டது.












Click it and Unblock the Notifications