தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
மதுரை: முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியலுக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலை, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில், பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு, பதவி மூப்பு அடிப்படையில், முதுகலை பட்டதாரிகளாக பதவி உயர்வு காலி பணியிடங்களுக்கு ஏற்ப, ஆண்டுதோறும் பதவி உயர்வு வழங்கப்படுவது வழக்கம்.

வழக்கமாக எப்படி பதவி உயர்வு வழங்கப்படும் என்றால் பதவி மூப்பு அடிப்படையில், 25 சதவீதம் பேருக்கு வழங்கப்படும். அதேநேரம், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 75 சதவீதமும் பணியிடங்கள் நிரப்பப்படும்.
பட்டதாரி ஆசிரியர்களாக, பத்து ஆண்டுகள் பணியாற்றியவர்கள் தகுதியின் அடிப்படையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்கப்படுவாரகள். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் யார் யார் என்பது குறித்து அந்தந்த மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்தில் பதவி முன்னுரிமை பட்டியல் கருத்துருக்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் வழங்குவார்கள்..
அதாவது பதவி உயர்வுக்கு தகுதியான ஆசிரியர்கள் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், வரலாறு, பொருளாதாரம், கணக்குப்பதிவியல், சமூக அறிவியல் உட்பட பாட வாரியாக அழைக்கப்பட்டுள்ளனர்.பட்டதாரி ஆசிரியர்கள் பதவி மூப்பு முன்னுரிமை பட்டியல் தலைமை ஆசிரியரால் வழங்கப்படும். அந்த பட்டியலை ஆய்வு செய்து பள்ளி கல்வித்துறை முடிவெடுக்கும்.. இதுதான் நடைமுறை.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
திண்டுக்கல் மாவட்டம் தெப்பத்துப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் விஜயகுமார் ஆகிய நான் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். பொது இடமாறுதல் கலந்தாய்வுக்காக காத்திருக்கிறேன். இதற்காக அறிவிப்பு வெளியானது. பொது இடமாறுதல் கலந்தாய்வு தொடர்பான வழிகாட்டுதல்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதன்படி கள்ளர் சீரமைப்பு பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும். ஆனால் இதற்கு மாறாக ஒரு பள்ளியில் 6 மாதம் பணிபுரிந்தவர் பணிமூப்பு பட்டியலில் எனக்கு முன்பாக சேர்க்கப்பட்டு உள்ளார். இது சட்டவிரோதம். எனவே முதுகலை பட்டதாரி ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வுக்கும், பணி மூப்பு பட்டியலுக்கும் தடை விதிக்க வேண்டும். முறையான பணி மூப்பு பட்டியலை தயாரித்து கலந்தாய்வு நடத்த உத்தரவிட வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணி மூப்பு பட்டியலுக்கு ஆட்சேபனை தெரிவிக்க போதுமான கால அவகாசம் வழங்கவில்லை. எனவே அந்த பட்டியலுக்கு தடை விதிக்கப்படுகிறது என நீதிபதி விக்டோரியா கவுரி உத்தரவிட்டு, விசாரணையை 4 வாரத்துக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications