டிடிசிபி அங்கீகாரம் பெற்ற மனை வாங்க போறீங்களா.. நில மோசடியில் ட்விஸ்ட்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு
மதுரை: வீட்டு மனை வாங்கும்போது, கண்ணை மூடிக்கொண்டு வாங்கக்கூடாது, ஏனெனில் நீங்கள் வாங்கும் வீட்டு மனை அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிலமாக இருக்கலாம்.. அல்லது நிலத்தின் வகையில் அரசு தந்த இலவச நிலமாக இருக்கலாம். சில நேரங்களில் வீட்டு மனைகளை பிரித்து விற்பனை செய்யும் போது பல்வேறு தவறுகள் நடக்கிறது.. அப்படித்தான் மதுரையில் பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட நிலம் விவகாரத்தில் பெரிய மோசடி நடந்தது.. இந்த விவகாரத்தில் மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகரைச் சேர்ந்த கே.ஜி.பாலசுப்பிரமணியன், எம்.ஆர்.ஜலஜா ஆகியோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், மதுரை வளர் நகர் இலந்தை குளத்தில் 75 சென்ட் நிலம் எங்கள் தாயார் பெயரில் இருந்து வந்தது.. அவர் இறந்த பின்பு அந்த சொத்தை நாங்கள், சகோதர, சகோதரிகள் பாகப்பிரிவினை செய்து அனுபவித்து வந்தோம்.

ஆனால் கடந்த 2019-ம் ஆண்டில் எங்கள் நிலத்தை அளவீடு செய்ய சென்றபோது அங்கு மதுரை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி சிறுவர் பூங்கா என பெயர் பலகை வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக மாநகராட்சியிடம் விசாரித்தபோது எங்கள் உறவினர்கள் சிலர் அவர்களுக்கு பாத்தியப்பட்ட சொத்தின் ஆவணத்தை ஆதாரமாக கொண்டு எங்கள் சொத்தை பொது பாத்தியம் போல் மோசடியாக சித்தரித்திருக்கிறார்கள்
பின்னர் உள்ளூர் திட்டக் குழுமம் மற்றும் மாநகராட்சியில் மோசடி ஆவணங்களை தாக்கல் செய்து எங்களுக்கு தெரியாமல் மனைப்பிரிவு ஒப்புதல் பெற்றதும் தெரியவந்தது. அதன்பேரில் எங்கள் நிலத்தையும் மனைகளாக பிரித்து விற்பனை செய்து வருகிறார்கள். இது தொடர்பாக மதுரை உள்ளூர் திட்டக்குழுமம் மற்றும் மதுரை மாநகராட்சியில் புகார் அளித்தும் நடவடிக்கை அவர்கள் எடுக்கவில்லை.
எனவே இறந்தவர்களின் பெயர்களை பயன்படுத்தி ஆவணங்களை மோசடியாக தயாரித்தவர்கள், உடந்தையாக இருந்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தனர்.
இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி தனபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் வக்கீல் சதீஷ் பாபு ஆஜராகி, மனுதாரர்களின் நிலத்தை மோசடி செய்யும் நோக்கத்துடன் செயல்பட்டவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுப்பது அவசியம் என வாதிட்டார். விசாரணை முடிவில், மனுதாரர்கள் புகார் குறித்து விசாரிக்க உரிய அதிகாரியை நியமித்து முறையான நடவடிக்கையை மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் எடுக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications