நிஜமாவா.. மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பொங்கல் முதல் இயங்கும்.. 120 படுக்கை! வந்தது அறிவிப்பு
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவக் கல்லூரி அடுத்த பொங்கல் முதல் புதிய கட்டடத்தில் செயல்பட தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்தில் வகுப்புகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க 120 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை வளாகமும் கட்டி முடிக்கப்படும் என்றும், ஒவ்வொரு மாதமும் ஒப்பந்த நிறுவனத்திடன் கட்டுமான பணிகள் குறித்து அறிக்கை கோரி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை இருந்து வருகிறது. 2019ஆம் ஆண்டே பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டாலும், இதுவரை திறக்கப்படவில்லை. சமீபத்தில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் 3டி மாடல் வீடியோ வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

3டி மாடல் வீடியோ
அந்த 3டி மாடல் வீடியோவில் கல்வி வளாகம், வெளி நோயாளிகளுக்கான மருத்துவ சேவைகள், மாணவர்களுக்கு விடுதிகள், அத்தியாவசிய மருத்துவ சேவை கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. அதேபோல் மாணவர் விடுதி, குடியிருப்புகள், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்படுகின்றன.
ஜனவரி முதல் செயல்பாடு
அதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம், பிரம்மாண்ட கார் பார்க்கிங் வசதிகள், நுழைவு வாயில் ஆகியவை உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் 2026 ஜனவரி மாதமும், முழுமையாக அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு 2027 ஜனவரி மாதம் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எய்ம்ஸ் நிர்வாகிகள் ஆலோசனை
இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் கல்லூரி பணிகள் தொடர்பான ஆலோசனை கூட்டம் தோப்பூரில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விருதுநகர் எம்பி மாணிக்கம் தாக்கூர், தென்காசி எம்பி ராணி திருகுமார், மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மருத்துவக் கல்லூரி
இந்த ஆலோசனை கூட்டத்திற்கு செய்தியாளர்களை சந்தித்து அனுமந்தராவ் பேசுகையில், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி கட்டுமான பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளது. எனவே அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் முதல், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி இந்த புதிய கட்டடத்தில் செயல்பட தொடங்கும். இந்த 6 மாத காலத்தில் வகுப்புகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும், மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க 120 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனை வளாகமும் கட்டி முடிக்கப்படும்.
ஒவ்வொரு மாதமும் அறிக்கை
அதேபோல் மருத்துவமனை உபகரணங்கள் வாங்கப்படும். 2027ஆம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு செயல்பட தொடங்கும். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடர்பாக ஒப்பந்த நிறுவனத்திடம் ஒவ்வொரு மாதமும் கட்டுமான பணிகளின் நிலை குறித்து அறிக்கை அளிக்க கோரி இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications