டிஎன்பிஎஸ்சியால் வேலையை இழந்த பெண்ணுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு! சென்னை ஹைகோர்ட் மதுரை அமர்வு உத்தரவு
மதுரை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) தவறான அறிவிப்பாணையால் வேலையை இழந்த பெண்ணுக்கு ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரை சேர்ந்தவர் ராஜபிரியா. இவர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: நான் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வந்தேன்.

கடந்த 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர், உதவியாளர்களாக பணிபுரிந்து வருவோர், தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் உதவி பிரிவு அலுவலர் அல்லது உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.
நான் அந்த அறிவிப்பாணையை பார்த்துவிட்டு உதவி பிரிவு அலுவலர் பணிக்கு விண்ணப்பித்தேன். பின்னர் நீர்வளத் துறையில் பணியில் சேர்ந்து தலைமைச் செயலகப் பயிற்சிக்கு அனுப்பப்பட்டேன். நான் உதவி பிரிவு அலுவலராக தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு தலைமைச் செயலக பணி விதிகளின் அடிப்படையில் நடைபெறவில்லை என்றும் அதனால் என் தேர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் உத்தரவிடப்பட்டது.
அப்போது என்னிடம் எந்தவித விளக்கமும் கேட்கப்படவில்லை. பின்னர் அரசு உதவிபெறும் பள்ளிகளில் இளநிலை உதவியாளர்களாக பணிபுரிபவர்கள் தமிழ்நாடு அமைச்சுப் பணியாளர்களாக கருதப்படமாட்டார்கள். அந்த அடிப்படையில் என் தேர்வு ரத்து செய்யப்படுகிறது என டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது.
இதை ரத்து செய்து என்னை நீர் வளத் துறையில் உதவி பிரிவு அலுவலராக பணியில் சேர்த்து, அனைத்து பணப் பலன்களையும் வழங்குமாறு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி கே.குமரேஷ்பாபு விசாரித்தார். டிஎன்பிஎஸ்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "மனுதாரர் தனியார் பள்ளி அமைச்சுப் பணியாளர், அவரை தமிழ்நாடு அமைச்சுப் பணிவிதிகளின் அடிப்படையில் அரசு ஊழியராக கருத முடியாது. தலைமைச் செயலக பணிக்கு தமிழ்நாடு அமைச்சுப் பணிவிதிகள் அல்லது தமிழ்நாடு ஜூடிசியல் பணி விதிகளின் கீழ் வருபவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்" என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கூறியிருப்பதாவது: டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பாணையில் (notification) குறைபாடு இருந்துள்ளது. இந்தக் குறைப்பாட்டால் மனுதாரர் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் மனுதாரர் மீது எந்த தவறும் இல்லை.
மனுதாரர் உதவி பிரிவு அலுவலர் பணிக்குரிய தகுதி பெற்றிருந்தாலும் தலைமைச் செயலக பணி விதிகளை பூர்த்தி செய்யாததால் அவரை பணியில் தொடர உத்தரவிட முடியாது. இந்த வழக்கில் மனுதாரருக்கு நீதிமன்றம் அனுதாபம் மட்டுமே தெரிவிக்க முடியும்.
எனினும் மனுதாரர் உதவி பிரிவு அலுவலர் பணிக்காக கல்வித் துறையால் அங்கீகரிக்கப்பட்ட ளநிலை உதவியாளர் பணியை துறந்துள்ளார். எனவே அவருக்கு டிஎன்பிஎஸ்சி ரூ 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். எதிர்காலத்தில் தவறாக அறிவிப்பாணை வெளியிட வேண்டாம் என டிஎன்பிஎஸ்சியை நீதிமன்றம் கேட்டுக் கொள்கிறது என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications