ஷாக்! மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகம் மீது கொடூர தாக்குதல்.. 2 பேர் வெறிச்செயல்
மதுரை: மதுரை மாநகராட்சியின் துணை மேயரான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகராஜன் வீடு, அலுவலகம் மீது ஆயுதங்களோடு வந்து 2 பேர் கொடூர தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாநகராட்சி திமுக வசம் உள்ளது. திமுகவின் இந்திராணி மேயராக உள்ளார். துணை மேயர் பதவி என்பது திமுகவின் கூட்டணி கட்சியாகன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலரான நாகராஜன் துணை மேயராக செயல்பட்டு வருகிறார்.

இவர் மதுரை ஜெய்ஹிந்த் புரத்தில் வசித்து வருகிறார். இன்று மாலையில் நாகராஜன் தனது மனைவி செல்வராணியுடன் வீட்டில் இருந்தார். இந்த வேளையில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 2 பேர் அவர்களின் வீடு மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இதை பார்த்த அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதுபற்றி உடனடியாக ஜெய்ஹிந்த்புரம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து துணை மேயர் நாகராஜனின் வீடு, அலுவலகத்தை பார்வையிட்டு விசாரித்தனர். மேலும் நாகராஜன் சார்பில் வழங்கப்பட்ட புகாரை தொடர்ந்து போலீசார் 2 பேரை பிடித்து போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும் அவர்கள் யார்? அவர்களின் பின்னணி என்ன? அவர்கள் எதற்காக துணை மேயர் நாகராஜன் வீடு, அலுவலகத்தில் தாக்குதல் நடத்தினர் என்பது பற்றிய விபரங்களை போலீசார் வெளியிடவில்லை. தற்போது முதற்கட்டமாக விசாரணை நடந்து வரும் நிலையில் விரைவில் அதுபற்றிய முழுவிபரங்களை போலீசார் வழங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications