வீடியோ பார்த்து நீதிபதி வேதனை.. கள்ளக்குறிச்சி போல் இனி ஒரு சம்பவம் நடக்ககூடாது.. ஹைகோர்ட் ஆர்டர்
மதுரை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சராயம் குடித்து 42 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் தான் வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பான வீடியோவை பார்த்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி, ‛‛சட்டவிரோத மதுவிற்பனை பற்றி மக்கள் வீடியோ, போட்டோ எடுத்து புகாரளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது வருத்தமாக உள்ளது. இதனால் தான் கள்ளக்குறிச்சியில் இன்று அப்பாவிகளின் உயிர்கள் போய் உள்ளது'' என வேதனைப்பட்டு அதிரடியாக உத்தரவிட்டார்.
திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் முத்துக்குமார். வழக்கறிஞரான இவர் மீது கடந்த வாரம் தாக்குதல் நடத்தப்பட்டது. கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் வந்த கும்பல் முத்துக்குமாரை தாக்கியது. இதையடுத்து முத்துக்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுபற்றிய புகாரின் பேரில் திண்டுக்கல் டவுன் தெற்கு போலீசார் சிலரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பான சிலர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றத்தை நாடினர்.
இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாதிக்கப்பட்ட முத்துக்குமார் தரப்பில், ‛‛இது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல். இதனால் இந்த முன்ஜாமீன் வழங்கக்கூடாது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்களுக்கும், சட்டவிரோத மது விற்பனைக்கும் தொடர்பு உள்ளது. திண்டுக்கல் டாஸ்மாக் அருகே இவர்கள் 24 மணிநேரமும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்கின்றனர். இதுபற்றி பல முறை புகார் அளித்துள்ளோம். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை'' என கூறப்பட்டது.
மேலும் சட்டவிரோத மதுபானம் விற்பனை தொடர்பான வீடியோவை கோர்ட் ஹாலில் நீதிபதி புகழேந்தியிடம் காண்பிக்கப்பட்டது. அதனை பார்த்து நீதிபதி புகழேந்தி வேதனையடைந்தார். மேலும் அவர் போலீசாருக்கு பல்வேறு கேள்விகளை கேட்டார். ‛‛ திண்டுக்கல்லில் இதுபோன்ற சம்பவங்களை எப்படி போலீசார் அனுமதிக்கிறார்கள்?. சட்டவிரோத மதுவிற்பனை செய்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?. சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க தவறிய காவலர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?. இதுபற்றி மாவட்ட எஸ்பி உரிய பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்.
சட்டவிரோத மதுபான விற்பனை தொடர்பாக பொதுமக்கள் வீடியோ, புகைப்படம் எடுத்து புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காதது வேதனையாக உள்ளது. இதனால் தான் கள்ளக்குறிச்சியில் பல அப்பாவிகள் இறந்துள்ளனர். இதுபோன்ற சம்பவம் இனி தமிழகத்தில் நடைபெற கூடாது. தமிழகத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை செய்வோர் மீது போலீசார் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.
இந்த வேளையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛தமிழகத்தில் சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறினார். இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி புகழேந்தி ஒத்திவைத்தார். தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 42 பேர் பலியாகி உள்ள நிலையில் மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி புகழேந்தி வேதனை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications