நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்ட அனுமதி தந்த அதிகாரிகள்.. மறக்க முடியாத தண்டனை கொடுத்த ஐகோர்ட்
மதுரை: நீர்நிலைகளில், எந்தவித கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதையும் கண்டுகொள்ளாதது போல இருக்கவும் முடியாது. ஓடையை தடுத்து கட்டப்பட்ட சேவை மைய கட்டிடத்துக்கு செலவு செய்யப்பட்ட ரூ.14 லட்சத்து 55 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து மாவட்ட கலெக்டர் வசூலிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த அருமைதாஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கடந்த 2016-ம் ஆண்டு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறுகையில், "மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உருவாகும் ஓடை, ஆவாரைக்குளம் பகுதியில் பழவூர் ஜேக்கப்புரம் கிராமத்திற்கு வருகிறது. இந்த ஓடையில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. இதனால் நீர்வரத்து தடுக்கப்பட்டுள்ளது. விவசாயமும் பாதிக்கப்படுகிறது. எனவே ஓடை ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு சென்ன உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில் நேற்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறுகையில், "இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யும்படி ஏற்கனவே உத்தரவிடப்பட்டு இருந்தது. ஆனால், சம்பந்தப்பட்ட ஓடையில் 100 நாள் வேலைத் திட்டத்தின்கீழ் தொடங்கப்பட்ட சேவை மையம் மற்றும் சமுதாயக்கூடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டிருக்கிறது. இதற்காக ரூ.14 லட்சத்து 55 ஆயிரம் செலவிடப்பட்டு உள்ளது என அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.
கட்டுமான பணிக்கான இடத்தை தேர்வு செய்வதற்கு முன்பாக எந்தவித முறையான ஆய்வும் இன்றி, இந்த அரசு கட்டிடங்களை கட்டுவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளித்து உள்ளனர். நீர்நிலைகளில், எந்தவித கட்டுமானத்தையும் அனுமதிக்க முடியாது. அதிகாரிகளின் அலட்சியத்தால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதையும் கண்டுகொள்ளாதது போல இருக்கவும் முடியாது. சேவை மைய கட்டிடத்துக்கு செலவு செய்யப்பட்ட ரூ.14 லட்சத்து 55 ஆயிரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் வசூலிக்க வேண்டும்.
இனிவரும் காலங்களில் நீர்நிலைகளில் எந்தவித கட்டிடங்களும் கட்டக்கூடாது என்பதை உறுதி செய்யும் வகையில் ஊரக வளர்ச்சித்துறை, மற்றும் நகராட்சி நிர்வாகத்துறை செயலாளர்கள் அந்தந்த துறை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். இந்த வழக்கை பொறுத்த வரை, சம்பந்தப்பட்ட நீர்நிலை மற்றும் ஓடையை அதன் இயல்பு நிலைக்கு கொண்டு வரும் வகையில் கட்டிடங்களை இடிக்க வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications