மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் இரு தளங்கள் தற்காலிகமாக மூடல்! ஏன் என்னாச்சு?
மதுரை: மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் கீழ் தளத்தில் மழை நீர் புகுந்துவிட்டதால் அங்குள்ள 2 நூலக பிரிவுகளும் தற்காலிகமாக மூடப்பட்டன.
மதுரை மாவட்டம் நத்தம் சாலையில் ரூ 215 கோடி செலவில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த நூலகம் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார்.

ரூ 60 கோடி மதிப்பிலான புத்தகங்கள் இங்கு உள்ளன. ரூ 18 கோடிக்கு தளவாடப் பொருட்கள், புத்தகங்களை வைக்க ரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன. அது போக இந்த நூலகம் ரூ 130 கோடியில்கட்டப்பட்டது. இதன் பரப்பளவு 2,13,338 சதுர அடியில் உள்ளது.
இங்கு பேஸ்மெண்ட், தரைத்தளம், பின்னர் 6 தளங்கள் உள்ளன. நவீன கட்டுமான அம்சங்களுடன் குழந்தைகள், வாசகர்கள், பொதுமக்களை கவரக் கூடிய வகையில் உள்ளது. மாற்றுத் திறனாளிகள் படிக்க வசதியாகவும் பார்வையற்றவர்களுக்கான பிரெய்லியும் இங்கு உள்ளது. இந்த நூலகம் திறந்தது முதல் இங்கு டிஎன்பிஎஸ்சி, வங்கித் தேர்வு, யுபிஎஸ்சி தேர்வுகளுக்கு நிறைய பேர் வந்து தயார் செய்து கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாக கோடை மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் எங்கு பார்த்தாலும் வெள்ளம் போல் மழை நீர் சூழ்ந்துள்ளது. அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் மழை நீர் புகுந்தது. கீழ் தளத்தில் உள்ள கலைக் கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு ஆகியவற்றில் நீர் புகுந்துவிட்டது.
கட்டடத்திற்கு வெளிப்புறமாக செல்லும் மழை நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மழை நீர் கட்டடத்தின் அறைகளுக்குள் புகுந்துவிட்டது. இந்த பிரிவுகள் தற்காலிகமாக மூடப்பட்டன. இதனால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர். வருங்காலத்தில் மழை நீர் உள்ளே புகாதவாறு அதிகாரிகள் ஆய்வு செய்து ஒரு தீர்வை கண்டறிய வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும். ஏற்கெனவே புகுந்த தண்ணீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகிறது.












Click it and Unblock the Notifications