மதுரையின் அடுத்த மேயர்.. போட்டியில் 6 பெண் கவுன்சிலர்கள்! அமைச்சர் மூர்த்தி, பிடிஆர் ஆதரவு யாருக்கு?
மதுரை: மதுரை மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், புதிய மேயருக்கான ரேசில் 6 பேர் இருக்கின்றனர். இவர்களில் முன்னாள் மண்டலத் தலைவர்களான வாசுகி சசிகுமார் மற்றும் சரவண புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் இருந்தாலும், அமைச்சர் மூர்த்தியின் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மதுரை மாநகராட்சியில் சொத்து வரியில் ரூ.150 கோடி முறைகேடு நடந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக மதுரை மேயராக இருந்த இந்திராணியின் கணவன் பொன்வசந்த் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அதேபோல் மண்டலத் தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில் மேயரின் கணவர் பொன்வசந்த் ஜாமீனில் வெளி வந்த நிலையில், அடுத்த நாளிலேயே மீண்டும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார். கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவு இல்லாமல் இருந்தார். இதன் காரணமாகவே பொன்வசந்த் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதனையறிந்த மதுரை மாவட்ட திமுக, அண்ணா அறிவாலயத்திற்கு உடனடியாக தகவல் கொடுத்தது. இதன்பின் மேயர் இந்திராணி மற்றும் மாநகராட்சி ஆணையர் சித்ரா ஆகியோர் சென்னைக்கு அழைக்கப்பட்டனர். இறுதியாக அமைச்சர் கேஎன் நேரு முன்னிலையில் இந்திராணி ராஜினாமா கடிதத்தை எழுதி கொடுத்தார். இதனால் மதுரை மாவட்ட திமுகவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஏனென்றால் நாளை மதுரை மாநகராட்சிக்கான புதிய மேயரை தேர்வு செய்யும் மாமன்றக் கூட்டம் நடக்கவுள்ளது. கடந்த சில மாதங்களாகவே மதுரை மேயர் மாற்றப்படுவது குறித்து தகவல் வெளியாகிக் கொண்டே இருந்தது. அதற்கேற்க அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோரின் ஆதரவை பெறுவதில் திமுக கவுன்சிலர்கள் ஆர்வம் காட்டி வந்தனர்.
குறிப்பாக அமைச்சர் மூர்த்தியின் கைகள் மதுரையில் ஓங்கி இருப்பதால், அவரிடம் பலரும் மேயர் பதவிக்காக நெருக்கம் காட்டி வந்தனர். மதுரை மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டால், புதிய மேயருக்கான ரேஸில் 6 பேர் இருக்கின்றனர். இதில் வாசுகி சசிகுமார் முன்னிலை வகிப்பதாக பார்க்கப்படுகிறது. இவர் மதுரை கிழக்கு மண்டலத் தலைவராக இருந்தவர்.
அதேபோல் சரவண புவனேஸ்வரியும் கடுமையான போட்டி அளித்து வருகிறார். இவரும் மண்டலத் தலைவராக இருந்தவர்தான். இவர்கள் மட்டுமல்லாமல் கவுன்சிலர்கள் மகாலட்சுமி, ரோகிணி, லட்சிகா ஸ்ரீ, இந்திரா காந்தி ஆகியோரின் பெயர்களும் பரிசீலனையில் உள்ளதாக திமுக வட்டாரம் கூறுகின்றன. தேர்தலுக்கு 6 மாதம் மட்டும் உள்ள சூழலில், புதிய மேயர் மாற்றத்தில் திமுக தலைமையும் கவனமாக உள்ளதாக கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications